
தமிழகத்தில் டெங்குவைக் கட்டுப்படுத்த அரசு எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை என்றாலும், அரசின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வெகு வேகமாக பரவி வருகிறது. இருந்தாலும், டெங்குவை கட்டுப்படுத்தும் வகையில் அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கூறி வருகின்றனர். தமிழக சுகாதார துறை செயலாளர், தமிழத்தில் டெங்கு பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், கோவையில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ண செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை என்றாலும், தமிழக அரசின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்றும் கூறினார்.
ஜி.எஸ்.டியில் நியாயமான கருத்துக்களின் அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தான் கெயில் திட்டம் கொண்டு வரப்பட்டது என்றார்.
திமுக - காங்கிரசை நம்பி விவசாயிகள் களத்தில் இறங்க வேண்டாம் என்றும் தொழில்ரீதியான திட்டங்கள் தமிழகத்துக்கு வருவதை சிலர் எதிர்ப்பதாகவும் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.