
அமைச்சர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசிவருவதால் அமைச்சர்கள் மீது முதல்வர் பழனிசாமி கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிலும் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சமயத்தில் அவரை அமைச்சர்கள் பார்த்தது தொடர்பாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறிய முரணான கருத்துகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகின.
ஆரம்பத்தில், மருத்துவமனையில் ஜெயலலிதாவைப் பார்த்ததாகவும் அவர் இட்லி சாப்பிட்டார் எனவும் இந்த உண்மையை என் பிள்ளைகளைப் போட்டு தாண்டி கூட கூறுவே என தெரிவித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பின்னர் அவையனைத்தும் பொய் என தெரிவித்தார். ஜெயலலிதாவை பார்த்ததாக கூறியதும் அவர் இட்லி சாப்பிட்டார் என கூறியதும் பொய் என தெரிவித்தார். இதையடுத்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் முரண் பேச்சுகள், கடும் விமர்சனத்துக்கு உள்ளாகின. சீனிவாசனை அடுத்து அதே கருத்தை மற்ற சில அமைச்சர்களும் தெரிவித்தனர்.
அமைச்சர்களின் முன்னுக்குப் பின் முரணான பேச்சுகளால் அவர்கள் மீதான மக்களின் மதிப்பீடு மட்டுமின்றி அரசு மீதும் மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அமைச்சர்களின் பேச்சால் அரசுக்கு அவப்பெயர் வந்துவிடக்கூடாது என்பதால் அமைச்சர்களை தனித்தனியாக அழைத்து இதுபோன்று பேசவேண்டாம் என முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
ஆனாலும் அமைச்சர்கள் தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணாக பேசிவருகிறார்கள். பரோலில் வந்த சசிகலாவை அமைச்சர்கள் சந்திக்க வாய்ப்பிருப்பதாக பரவிய தகவலை அடுத்து சசிகலாவையும் அமைச்சர்களையும் முதல்வரின் உத்தரவின்பேரில் உளவுத்துறை கண்காணித்துவருகிறது.
பரோலில் வந்துள்ள சசிகலாவை இதுவரை அமைச்சர்கள் யாரும் சந்திக்காத நிலையில், சசிகலாவுக்கு ஆதரவாக அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் பேசியுள்ளார். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக ஆட்சி மீண்டும் அமைய பாடுபட்டவர் சசிகலா எனவும் தன் விருப்புவெறுப்புகளை ஓரங்கட்டிவிட்டுத்தான் அரசுக்கு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தார்.
ஏற்கனவே அமைச்சர்களின் பேச்சால் அதிருப்தியில் உள்ள முதல்வர் பழனிசாமியை, செல்லூர் ராஜூவின் இந்த பேச்சும் மேலும் கடுப்பேற்றியுள்ளதாம். எனவே எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு, சபாநாயகருக்கு ஆதரவாக வந்தால், சொல்பேச்சு கேட்காத அமைச்சர்களின் பதவியை பிடுங்க முதல்வர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே புதிய அமைச்சரவையை அமைக்கும் திட்டத்தில் இருக்கிறாராம் முதல்வர்.