முதல்வரை மிஞ்சிய சூப்பர் முதல்வர்!! நடவடிக்கை எடுக்காத ஆளுநர் ... தடதடக்கும் திமுக தலைவர் ஸ்டாலின்.!!

Published : Mar 04, 2020, 09:44 PM IST
முதல்வரை மிஞ்சிய சூப்பர் முதல்வர்!! நடவடிக்கை எடுக்காத ஆளுநர் ... தடதடக்கும் திமுக தலைவர் ஸ்டாலின்.!!

சுருக்கம்

துணை முதலமைச்சர், முதலமைச்சர்னு கேள்விப்பட்டிருக்கிறோம்.அதென்ன சூப்பர் முதலமைச்சர்,தமிழகத்தில் இப்படியொரு முதலமைச்சர் பதவியை அறிமுகப்படுத்தியிருக்கிறார் எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின்.பால்வளத்துறை அமைச்சர் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் வைத்திருக்கிறார் ஸ்டாலின்.

 T.Balamurukan
துணை முதலமைச்சர், முதலமைச்சர்னு கேள்விப்பட்டிருக்கிறோம்.அதென்ன சூப்பர் முதலமைச்சர்,தமிழகத்தில் இப்படியொரு முதலமைச்சர் பதவியை அறிமுகப்படுத்தியிருக்கிறார் எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின்.பால்வளத்துறை அமைச்சர் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் வைத்திருக்கிறார் ஸ்டாலின்.

குமுதம் வார இதழ் பத்திரிகையாளர் கார்த்தி மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் 'முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் முதலமைச்சர்' என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..., "விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. அரசியலில் அமைச்சருக்கும், சட்டமன்ற உறுப்பினருக்கும் நடக்கும் மோதல் போக்கு குறித்த செய்தியினை வெளியிட்ட “குமுதம் ரிப்போர்ட்டர்” பத்திரிகைச் செய்தியாளர் கார்த்தி, சிவகாசியில் கடுமையான தாக்குதலுக்குள்ளாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆவின் மேலாளர் (நிர்வாகம்) பதவிக்கு, அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரியின் மனைவியும், மற்றொரு மேலாளர் பதவிக்கு விருதுநகர் அ.தி.மு.க. பிரமுகர் மகனும் நியமிக்கப்பட்டது தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மனுக்கும் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளையும், அரசியல் மோதல்களையும், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம், குமுதம் ரிப்போர்ட்டர் இதழ் வெளியிட்டுள்ள நிலையில், அதன் செய்தியாளர் மீது இந்தக் கொலைவெறித் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் வகையில், நடைபெற்றுள்ள இந்தக் கொலைவெறித் தாக்குதலுக்கு தி.மு.கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்வதுடன், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீதும், அதற்குக் காரணமானவர்கள் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும், வழக்கமாக  நடவடிக்கை எடுப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு, பிறகு குளிர்பதனப் பெட்டியில் அடைத்து வைக்கும் தந்திரத்தை இந்த நிகழ்விலாவது கைவிட வேண்டும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை வலியுறுத்துகிறேன்.

ஊடக வெளிச்சம் எனும் மலினமான அரசியல் விளம்பரத்திற்காக,  முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் முதலமைச்சர் போலச் செயல்படும் அமைச்சரின் சொற்கள் பலவும் நச்சுத் தன்மை மிக்கவையாக உள்ளன. ‘அம்மா வழி ஆட்சி’ என்பவர்களின் பேச்சுகளும், அதைத் தொடர்ந்து திட்டமிட்டு நடத்தும் வன்முறைகளும் பத்திரிகைச் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில், செய்தியாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதலும், அமைதிக்குக் கேடு செய்து, குலைக்கின்ற வகையிலேயே தொடர்கின்றன.

எப்போது யாரைப்பற்றிப் பேசினாலும் - "அடிப்பேன், உதைப்பேன், நாக்கை அறுப்பேன், தூக்கிப்போட்டு மிதிப்பேன்" என்று, அமைச்சராக இருப்பதாலேயே ஆணவத்தினால், அராஜகமாகக் கொக்கரித்து வரும் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்காமல் ஆளுநர் அமைதி காப்பது ஏன்? இதற்கு, இந்த முற்றிப்போன நிலையிலாவது, முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், தாக்குதலுக்குள்ளான செய்தியாளர் கார்த்திக்கு உரிய தரமான சிகிச்சையும் பாதுகாப்பும் அளிக்கப்படவேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

234 தொகுதிகளுக்கும் விருப்பமனு..! முதல் கட்சியாக அறிவிப்பு வெளியிட்ட காங்கிரஸ்..
டெல்டாவை தட்டி தூக்கிய விஜய்.. செங்கோட்டையனின் மாஸ்டர் பிளான் சக்சஸ்..? தவெகவில் மேலும் ஒரு அமைச்சர்