திமுக ஆட்சியில் தெய்வங்களும் மகிழ்ச்சியாக இருக்கும் சூழல்.. சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அதிரடி.!

Published : Apr 07, 2022, 08:52 PM IST
திமுக ஆட்சியில் தெய்வங்களும் மகிழ்ச்சியாக இருக்கும் சூழல்.. சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அதிரடி.!

சுருக்கம்

தெய்வங்களும் மகிழ்ச்சியாக இருக்கும் சூழல் திமுக ஆட்சியில் நிலவுகிறது என்று தமிழக சட்டப்பேரவையில் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு தமிழக இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில், “12 ஆண்டுகளைக் கடந்தும் ஆகம விதிப்படி குட முழுக்கு நடத்தப்படாத கோயில்களுக்கு விரைவில் குட முழுக்கு நடத்தப்படும். இதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.100 கோடி  ஒதுக்கப்பட்டுள்ளது. யாரும் எதையும் கேட்காததையும் செய்யும் அரசாக தற்போதைய திமுக அரசு உள்ளது. இதனால் தெய்வங்களும் மகிழ்ச்சியாக இருக்கும் நல்ல சூழல் திமுக ஆட்சியில் நிலவுகிறது. 

விரைவில் ரோப் கார் பணிகள்

திருநீர்மலை, திருக்கழுக்குன்றம், திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயிலுக்கு ரோப் கார் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும். அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயிலில் மாற்றுப் பாதையில் ரோப்கார் அமைப்பது பற்றி ஆய்வு மேற்கொண்டு, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றவுடனே மாநிலம் முழுவதும் 507 கோயில்களில், 907 பணிகள் ரூ. 664 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்னார், இனியவர் என்றெல்லாம் இந்த அரசு பாராமல், யார் சிபாரிசு செய்தாலும் அதையெல்லாம் பார்க்காமல் பணிகளை செய்து தர முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

குளித்தலை தொகுதி கோயில்

பகவதியம்மன் கோயிலில் முந்தைய அதிமுக ஆட்சியில் அனுமதி தரப்பட்டிருந்த எந்தப் பணிகளும் தற்போது நிறுத்தப்படவில்லை. குளித்தலை தொகுதியில் அய்யர்மலை அருள்மிகு ஸ்ரீரத்தினகிரீஸ்வரர் திருக்கோயிலுக்கு விரைவில் குட முழுக்கு நடத்தப்படும். 2008- ஆம் ஆண்டு குடமுழுக்குக்குப் பிறகு, கடந்த ஆண்டு நேரில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டேன். தொல்லியல் துறை மற்றும் மண்டல குழுவில் ஆலோசனை மேற்கொண்டு விரைவில் அனுமதி பெறவும், அடுத்த கட்டமாக வல்லுநர் குழு அனுமதிக்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  ரூ.1.25 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. தொல்லியல் துறை அனுமதி பெற்று விரைவில் குடமுழுக்கு நடத்தப்படும்” என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!