திமுகவின் வெற்றிக்கு சொந்தக் கட்சியினரே வைக்கும் சூன்யம்... அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்..!

By Thiraviaraj RMFirst Published Feb 18, 2021, 12:51 PM IST
Highlights

இது பற்றி யாராவது கேட்டால் அவர்களை மிரட்டுகிறார். தலைமை என் கைக்குள் இருக்கும்வரை யாரும் என்னை எதுவும் செய்ய முடியாது என மிரட்டுகிறார்.

திமுகவை அவ்வளவு எளிதில் ஆட்சியைப் பிடிக்க விடமாட்டார்கள் போலிருக்கிறதே என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  சொன்னது எதிர்கட்சியினருக்கு மட்டுமல்ல அவரது சொந்தக் கட்சிக்கும் பொருந்தும் என்கிறார்கள் உள்விவகாரம் அறிந்தவர்கள். 10 ஆண்டுகளுக்கு பிறகாவது ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்கிற துடிப்போடு தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் ஸ்டாலின் பம்பரமாக சுழன்று கொண்டிருக்க, உ.பி.,க்களோ இப்போதோ ஆட்சியைப் பிடித்துவிட்ட தெம்பில் அதகளம் செய்து வருகின்றனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காடு சட்டமன்றத் தொகுதி மலைவாழ் மக்களுக்கென ஒதுக்கப்பட்ட தனி தொகுதி. இங்கு சிட்டிங்க் எம்.எல்.ஏ.,வாக அதிமுகவை சேர்ந்த சித்ரா இருந்து வருகிறார். இந்த தொகுதியில் இந்த முறை திமுக சார்பில் களமிறங்க பலத்த போட்டி நிலவுகிறது. பாரம்பரிய கட்சிக்காரர்கள் பலரும் மூச்சுவாங்க ரேசில் ஓடிக்கொண்டிருக்க, சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரான சிவலிங்கம், மாதேஸ்வரன் என்பவரிடம் பெரும் தொகையைப் பெற்றுக்கொண்டு ‘’தலைமையிடம் பேசிவிட்டேன் உனக்குத்தான்யா சீட்’’என உறுதியளித்ததாக உ.பிக்களே புகார் தெரிவிக்கின்றனர். 

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் பாரம்பரிய அதிமுககாரரான மாதேஸ்வரன் சமீபத்தில்தான் திமுகவிற்கு இடம்பெயர்ந்தார். இதனால் ஏற்காடு தொகுதி திமுகவினர் கொதித்துப்போய் உள்ளனர். இது பற்றி அவர்கள் கூறுகையில், ’’10 வருஷம் பதவியில் இல்லாததால் பெரும்பாலான திமுக மாவட்ட நிர்வாகிகள் பஞ்சப்பாட்டு பாடிக்கொண்டிருக்க, சிவலிங்கம் காட்டிலோ எப்போதும் அடை மழைதான். ஆளும் கட்சியோடு மறைமுக அண்டர்ஸ்டேண்டிங் வைத்துக்கொண்டு காண்ட்ராக்டுகளில் கல்லா கட்டுகிறவர் கட்சிப் பதவிகளை கூறுபோட்டு விற்பதிலும் பலே கில்லாடி. இதுவரை கட்சி பதவிகளை விற்று வந்தவர் இப்போது எம்.எல்.ஏ சீட்டையும் விற்கத் தொடங்கியிருக்கிறார்.

இது பற்றி யாராவது கேட்டால் அவர்களை மிரட்டுகிறார். தலைமை என் கைக்குள் இருக்கும்வரை யாரும் என்னை எதுவும் செய்ய முடியாது என மிரட்டுகிறார். இப்போதைய சூழலில் ஆளும் அதிமுக மீதான அதிருப்தியால் இந்தத் தொகுதியில் திமுக ஜெயிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அதிமுக பின்னணி கொண்ட மாதேஸ்வரன் திமுக சார்பில் நின்றால் கட்சிக்காரர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே தலைமை இந்த விஷயத்தில் தீர விசாரித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும். அத்துடன் உண்ட வீட்டிற்கே துரோகம் செய்யும் சிவலிங்கம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒட்டுமொத்த கட்சிக்காரர்களின் எண்ணம் இதுவே’’என்கிறார்கள். 

click me!