அடிதூள்... வரும் 21 ஆம் தேதி முதல் தேர்தல் திருவிழா ஆரம்பம்.. சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம்..

By Ezhilarasan BabuFirst Published Dec 17, 2020, 12:02 PM IST
Highlights

முன்னதாக அன்று காலை 11:30 மணி அளவில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற உள்ளனர். அரசியல் கட்சிகளை உயர்மட்ட குழுவினர் தனித்தனியாக சந்திப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.

விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டக்குழு வரும் 21ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே தமிழகத்தில் 2021க்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார்படுத்துவது, சமூக இடைவெளியை காக்க வாக்குச்சாவடிகளில்  வாக்காளர்களின் எண்ணிக்கையை குறைத்து வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் பற்றி தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உயர் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி வருகிறார். 

தமிழகத்தில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் முதற் கட்டமாக இந்திய தேர்தல் ஆணையம் தமிழகம் வந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளது. முக்கியமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லாத நிலையில் தான் தேர்தலை சுமூகமாக நடத்த முடியும் எனவே சட்டம் ஒழுங்கு பிரச்சினை, பொது பிரச்சினை, தேர்தல் தயார்நிலை, அரசியல் கட்சிகளின் தேர்தல் தொடர்பான கோரிக்கைகள், கருத்துக்கள் ஆகியவற்றை அறிய தமிழகத்திற்கு  உயர்மட்ட குழுவை இந்திய தேர்தல் ஆணையம் அனுப்புகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் பொதுச்செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையில் உயர்மட்டக்குழு வரும் 21ஆம் தேதி தமிழகம் வர உள்ளது. தமிழகத்தின் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருடன் உயர்மட்ட குழு ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. 

முன்னதாக அன்று காலை 11:30 மணி அளவில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற உள்ளனர். அரசியல் கட்சிகளை உயர்மட்ட குழுவினர் தனித்தனியாக சந்திப்பார்கள் எனவும் கூறப்படுகிறது. 22ஆம் தேதி தமிழகத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்துவார்கள். இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், போலீஸ் டிஜிபி, சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். தேர்தல் வரவுள்ள நிலையில் மாநில அரசு மேற்கொள்ள உள்ள தயார் நிலை குறித்தும் இந்த கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

click me!