தேர்தல் ஆணையம் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும்... மம்தாவுக்கு ஆதரவாக களத்தில் குதித்த ஸ்டாலின்.

By Ezhilarasan BabuFirst Published Apr 13, 2021, 12:38 PM IST
Highlights

இதனை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கூறி தேர்தல் ஆணையம் அடுத்த 24 மணி நேரத்திற்கு பிரச்சாரத்தில் ஈடுபட அவருக்கு தடை விதித்துள்ளது.  

அனைத்து கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் சமவாய்ப்பினை தேர்தல் ஆணையம் உறுதி செய்வதோடு, ஒரு சார்பின்மை மற்றும் நடுநிலை கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்யப்பட வேண்டும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ள நிலையில் ஸ்டாலின் இவ்வாறு  பதிவிட்டுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் திட்டமிட்டபடி ஒரே கட்டமாக அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. ஆனாலும் ஆங்காங்கே ஒரு சில சர்ச்சைகள் அரங்கேறியுள்ளன. 

இந்நிலையில் மே-2 ஆம் தேதி தேர்தல் முடிவுக்காக ஒட்டு மொத்த தமிழகமே காத்திருக்கிறது. அதேபோல மேற்குவங்கத்தில் உள்ள 294 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 4 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், 5 ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் திருணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி முஸ்லிம் வாக்குகளை குறிவைத்து அவர் மதரீதியாக பேசியதாகவும், மத்திய பாதுகாப்பு படையினருக்கு எதிராக மக்களை தூண்டும் வகையில் வன்முறையாக பேசியதாகவும் அவர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

இதனை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கூறி தேர்தல் ஆணையம் அடுத்த 24 மணி நேரத்திற்கு பிரச்சாரத்தில் ஈடுபட அவருக்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலின், நமது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை என்பது நேர்மையான, நியாயமான தேர்தல்களில் தான் நிலைகொண்டுள்ளது. ஆகவே அனைத்து கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் சமமான வாய்ப்புகளை தேர்தல் ஆணையம் உறுதி செய்வதோடு, ஒரு சார்பு நிலை மற்றும் நடுநிலை கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். 

அதேபோல தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுகவினருக்கு எதிராக தேர்தல் ஆணையம் கண்டனத்தையும், நோட்டிஸ் களையும் பதிவு செய்தது, ஆ ராசாவுக்கு பிரச்சாரம் செய்ய தடை, உதயநிதியின் பேச்சுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் என தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் விமர்சித்ததும் குறிப்பிடத்தக்கது. 
 

click me!