
இரட்டை இலை சின்னத்தை நிரந்தரமாக முடக்க வேண்டும் என்ற டிடிவியின் கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம் வழக்கை வரும் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. இதைதொடர்ந்து காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் ஒபிஎஸ் தரப்பில் மதுசூதனனும் சசிகலா தரப்பில் டிடிவி தினகரனும் போட்டியிட்டனர்.
இதில் உண்மையான அ.தி.மு.க. தாங்கள் தான் என்றும், கட்சியின் பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் தங்களுக்கே வழங்க வேண்டும் என்றும் இரு தரப்பும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது.
இதனால் அதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் முடக்கியது. இதையடுத்து இரு அணியும் தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்து வந்தது.
இதனிடையே எடப்பாடி அணியும் ஒபிஎஸ் அணியும் ஒன்றாக இணைந்தது. இதனால் எடப்பாடி சசிகலாவையும் டிடிவியையும் கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரிகள், இரு அணிகளிடமும் கட்சி மற்றும் சின்னம் குறித்து கடந்த 6 ஆம் தேதி விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்த அடுத்த கட்ட விசாரணை இன்று தொடங்கியது. இதில் முதலில் வாதாடிய டிடிவி தரப்பு வழக்கறிஞர் அஸ்வினிகுமார் இரட்டை இலை சின்னத்தை முடக்குமாறு வாதாடினார்.
டிடிவி தரப்பில் அஸ்வினி குமார் முன்வைத்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. மேலும் இந்த வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.