
சென்னை ஆர்.கே.நகரில் முறைகேடுகள் நடக்காமல் இருக்க தேர்தல் ஆணையம் பாதுகாப்பை தீவிரப்படுத்தி வருகிறது. இதற்காக 15 கம்பெனிகளை சேர்ந்த துணை ராணுவப்படைகள் சென்னை விரைகின்றன. 4 கம்பெனி துணை ராணுவப்படைகள் நாளை சென்னை வருகிறது.
ஆர்.கே.நகரில் நீண்ட நாள் இழுப்பறிக்குபிறகு டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் கரு.நாகராஜன், டிடிவி தினகரன் உள்ளிட்ட சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொப்பி சின்னம் மீண்டும் கிடைக்காததால் டிடிவி தினகரன் பிரஷர் குக்கர் சின்னத்துக்கு வாக்குகேட்டு பிரசாரம் செய்து வருகிறார்.
இதனிடையே ஆர்.கே.நகரில் கடும் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனிடையே சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவோரின் சின்னத்தை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொறுத்தும் பணி இன்று நடைபெற்று வருவதாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
மொத்தம் உள்ள 1,187 இயந்திரங்களில் நோட்டா மற்றும் 59 வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னம் பொருத்தப்படுவதாகவும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களை சரிபார்க்கும் பணியும் நடைபெற்று வருவதாக தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் கூறியுள்ளார்.
மேலும் ஆர்.கே.நகரில் தேர்தல் குறித்து எந்த புகார் வந்தாலும் அதிகபட்சம் 5 நிமிடத்தில் சென்று நடவடிக்கை எடுக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர் காவல் ஆய்வாளர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஆர்.கே.நகரில் முறைகேடுகள் நடக்காமல் இருக்க தேர்தல் ஆணையம் பாதுகாப்பை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் 11 கம்பெனி துணை ராணுவப்படைகள் ஏற்கனவே சென்னை வந்துள்ளது. மேலும் 4 கம்பெனி துணை ராணுவப்படைகள் நாளை சென்னை வருகிறது