
வெள்ளிக்கிழமை இன்று காலை, நாடாளுமன்றத்துக்கு வந்திருந்த சோனியா காந்தி, தான் ஓய்வு பெறப் போவதாக செய்தியாளர்களிடம் கூறினார். அது, உடல் நிலை காரணமாக அரசியலில் இருந்து சோனியா ஓய்வு பெறப் போகிறார் என்ற ரீதியில் செய்தி தீயாகப் பரவியது. இதைக் கேட்டதும் காங்கிரஸாரே சற்று அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், சோனியா காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்துதான் விலகப் போகிறாரே தவிர, அரசியலில் இருந்து அல்ல என்று அக்கட்சி விளக்கம் அளித்துள்ளது.
காங்கிரஸின் தலைவராக அக்கட்சியின் துணைத் தலைவராக இருந்த ராகுல் காந்தி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டார். அவர், காங்கிரஸ் தலைவராக சனிக்கிழமை நாளை முறைப்படி பொறுப்பேற்றுக் கொள்கிறார்.
இந்நிலையில், ராகுல் பதவி ஏற்பு குறித்தும், தலைவர் பதவி குறித்தும், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் சோனியா காந்தியிடம் கேட்டனர். அதற்கு அவர், இனி தனது பணி ஓய்வு பெறுவதுதான் என்று கூறினார்.
சோனியா கூறியதன் அடிப்படையில், அவர் உடல் நிலை காரணமாக, அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போகிறார் என்று செய்திகள் வெளியாகின. இதனைக் கேட்டதும் காங்கிரஸாரே சற்று அதிர்ச்சி அடைந்தனர். ஏன் இந்த முடிவு என்று ஆர்வத்துடன் கேட்டனர். இந்நிலையில், சோனியாவின் கருத்துக்கு விளக்கம் சொல்ல வேண்டிய நிலைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தள்ளப்பட்டனர்.
இதை அடுத்து, ஊடக நண்பர்களுக்கு எங்கள் தாழ்மையான விளக்கம் என்னவென்றால், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்துதான் சோனியா காந்தி ஓய்வு பெறப் போகிறார். அரசியலில் இருந்து அல்ல.. என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா தன் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கிட்டத்தட்ட 19 வருடங்கள் காங்கிரஸின் தலைமைப் பொறுப்பில் இருந்த சோனியா காந்தியின் ஆசியும், ஞானமும், காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மீதான உள்ளார்ந்த ஈடுபாடும் கட்சிக்கு வழிகாட்டும் விளக்காக இருக்கும் என்று கூறியுள்ளார் ரண்தீப் சுர்ஜேவாலா.