
தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தனது காலில் ஏற்பட்ட காயத்திற்கு சென்னை எழும்பூர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்படாமல் இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளை மக்கள் நாட வேண்டும் என்பதற்காகவே அரசு மருத்துவமனைகள் திட்டமிட்டே தரம் உயர்த்தப்படாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
சிறந்த மருத்துவம் என்றால் அது தனியார் மருத்துவமனையில்தான் கிடைக்கும் என்ற மக்களின் மனநிலையும் மாற்றப்பட வேண்டிய ஒன்று. அதேநேரத்தில் மக்களின் நம்பிக்கையை பெறும் அளவிற்கு சிறந்த சிகிச்சை அளிக்க வேண்டியது அரசு மருத்துவமனைகளின் கடமை.
ஆட்சியாளர்கள், அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் தானாக அவை தரம் உயர்த்தப்படும். எனவே ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற வேண்டும் என்ற குரலும் ஓங்கி ஒலிக்கிறது.
இந்நிலையில், தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தனது வலது காலில் ஏற்பட்ட காயத்திற்கு சென்னை எழும்பூர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். மாநிலத்தைப் பொறுத்தவரை அதிக அதிகாரம் படைத்த உயர் பதவி தலைமை செயலாளர். ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எல்லாம் தலைமை பொறுப்பில் இருப்பவர் தலைமை செயலாளர் தான். அப்படி உயர்ந்த பொறுப்பில் இருக்கும் தலைமை செயலாளரே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது, மற்ற அதிகாரிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணம்.
இதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையுமான குமரி ஆனந்தன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் ஆகியோரும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.