அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. மேலும் கர்நாடக தேர்தலில் போட்டியிட இரட்டை இலை சின்னத்தையும் ஒதுக்கியுள்ளது.
அதிமுகவில் அதிகார மோதல்
அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அங்கீகரிக்க கோரி தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த மனு மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் டெல்லி நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது தேர்தல் ஆணையத்தில் அதிமுக சட்டவிதிகள் திருத்தம் தொடர்பான மனு மீது விரைவில் நடவடிக்கை எடுக்க கோரப்பட்டது.
இபிஎஸ்யை அங்கீகரித்த தேர்தல் ஆணையம்
அப்போது 10 நாட்களுக்குள் எடப்பாடி பழனிசாமி மனு மீது உரிய முடிவு பிறப்பிக்க தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. நாளையுடன் 10 நாள் அவகாசம் முடிவடையவுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அ.தி.மு.க.வில் திருத்தப்பட்ட விதிகளை ஏற்றுக்கொள்வதாகவும், அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று கடிதம் அனுப்பியுள்ளது. மேலும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வகையில் இரட்டை இலை சின்னத்தையும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு வழங்கியுள்ளது. தற்போது எடுக்கப்பட்டு உள்ள முடிவுகள் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இதையும் படியுங்கள்