தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினரின் ஆதரவு என்றைக்கும் திமுகவுக்கு கிடையாது.. அதிரவைத்த அமைச்சர் ஜெயக்குமார்.

By Ezhilarasan BabuFirst Published Feb 26, 2021, 1:27 PM IST
Highlights

அதிமுக பாஜக கூட்டணியை நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைவரும் விரும்பி ஏற்றுக் கொண்டனர் என்றும்,  வரும் தேர்தலில் சசிகலா இல்லாத அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் 2021ல் ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார். 

பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு தான் குறைக்க வேண்டும்; மாநில அரசிற்கு வரிவருவாய் மூலம் குறைவாக உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.சென்னை வள்ளலார் நகரில் உள்ள புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையத்தை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

வடசென்னை மக்கள் மேம்பாட்டிற்காக குறுகிய நாட்களில் தொலைநோக்கு திட்டம் பல தங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும், இதன் ஒரு பகுதியாக தான் வண்ணாரப்பேட்டை விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவையை மாநில அரசு செயல்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும்,  தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததை செய்தியாளர்கள் சுட்டிக்காட்டியதற்கு,ஒரு கோடி ரூபாய் செலவில் மெட்ரோ ரயில் நிர்வாகம் பேருந்து நிலையத்தை சீரமைத்த தந்துள்ளது என்றும், என்னென்ன அடிப்படை வசதிகள் தேவை படுகிறது என்பதை கேட்டு அதனை மாநில அரசு விரைவில் செய்து கொடுப்போம் என்றும் தெரிவித்தார். 

பின்னர் திமுக தலைவர் மீது தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள புகார் குறித்து கேட்டபோது, திமுக என்றும் தாழ்த்தப்பட்ட மக்களை தரக்குறைவாக நடத்துகிறது என்றும், முன்பு இதே போல் ஆர்.எஸ் பாரதி தயாநிதி மாறன் போன்றோர் தாழ்த்தப்பட்ட மக்களை கொச்சைப் படுத்திப் பேசி உள்ளனர் என்றும், இதனால் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினரின் ஆதரவு என்றைக்கும் திமுகவுக்கு இருக்காது என்றும் தெரிவித்தார்.

மேலும் பொதுத் தொகுதியில் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளரை நிறுத்தி அவரை வெற்றிபெறச் செய்த கட்சி அதிமுக தான் என பெருமிதம் தெரிவித்தார். அதிமுக பாஜக கூட்டணி குறித்து தனியரசு கருத்து அவரது தனிப்பட்ட கருத்து என்றும், அதிமுக பாஜக கூட்டணியை நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைவரும் விரும்பி ஏற்றுக் கொண்டனர் என்றும்,  வரும் தேர்தலில் சசிகலா இல்லாத அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் 2021ல் ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார். 

பெட்ரோல் டீசல் வரியை மாநில அரசே குறைத்துக் கொள்ளலாம் என மத்திய அமைச்சரின் கருத்து குறித்து பதில் அளித்த அவர், மத்திய அரசிற்கு வரி வருவாய் மூலம் பல இடங்களில் இருந்து வருவதாகவும்,  மாநில அரசின் வரி வருவாய் மூலம் என்பது குறைந்த அளவிலேயே இருப்பதாகவும்,  இதற்காக மக்களிடம் வரி விதிக்க முடியாது என்றும், மத்திய அரசுதான் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்து விலை குறைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் அதிமுகவை மீட்டெடுப்போம் என்ற தினகரனின் கருத்திற்கு, ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது என பதிலளித்தார். 

 

click me!