அடிபட்டும் திருந்தாத திமுக... மீண்டும் கிளம்பும் ’நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா..?’ விவகாரம்..!

By Thiraviaraj RMFirst Published Sep 19, 2020, 5:24 PM IST
Highlights

இது திமுகவுக்கே பின்னடைவை ஏற்படுத்தும் என்பது ரத்தத்தின் ரத்தங்களுக்கு புரியாதா? எனக் கேட்கிறார்கள் கருப்பு, சிவப்பு கொடிக்கு உரிமையானவர்கள்.
 

கடந்த மே மாதம் 13 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் எம்.பி. உள்ளிட்டோர் தலைமைச் செயலாளரை சந்தித்து தங்களுக்கு வந்த மனுக்களில் ஒரு பகுதியை வழங்கினார் இந்த சந்திப்பு சுமூகமாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

 சென்னையை சேர்ந்த திமுக மக்களவை உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, தயாநிதி மாறன், கலாநிதி மற்றும் தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் தமிழக அரசு தலைமை செயலாளர் சண்முகம் அவர்களை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்தனர். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் தளபதியின் ஒன்றிணைவோம் வா வேண்டுகோளுக்கு செவி சாய்த்து அரசு உதவி கோரி ஒரு லட்சம் மக்கள் சமர்ப்பித்த கொரோனா கொள்ளை நோய் நிவாரண மனுக்களை ஒப்படைத்தனர்.

இவர்கள் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்லால் முன்னாள் மத்திய அரசின் கேபினட் அமைச்சர்களாக பல்லாண்டுகள் பதவி வகித்தவர்கள். இவர்களுக்கான குறைந்தபட்ச வரவேற்பு முறைகளைக்கூட அங்கு பின்பற்றவில்லை. இருப்பினும் கழக எம்.பி.க்கள் கழகத் தலைவரின் நேரடி பார்வையில் செயல்படுத்தப்படும் ஒன்றிணைவோம் வா செயல் திட்டம் பற்றி விளக்கியதோடு இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட பல்லாயிரம் மனுக்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் நிர்வாகிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள விவரத்தை தெரிவித்தனர்.

இது தொடர்பாக அரசு நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒரு லட்சம் மனுக்களை தலைமைச் செயலாளரிடம் அளித்து உரிய நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டி வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், தலைமைச் செயலாளர் சண்முகம் சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பதில் கவனம் செலுத்தியதாகவும், தங்களை அலட்சியப்படுத்தியதாகவும் திமுக எம்.பி.,க்கள் புகார் கூறினர். 

தமிழக மக்களுக்கு நிவாரண உதவி பெற்றுத்தர வேண்டுகோள் விடுக்க சென்ற கழக பாராளுமன்ற உறுப்பினர்களை கண்ணியக் குறைவாக நடத்திய தலைமைச் செயலாளர் சண்முகம் உடனடியாக வருத்தமும் மன்னிப்பும் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால், இப்பிரச்சினையை நாடாளுமன்ற உரிமைக்குழுவுக்கு எடுத்துச் சென்று தலைமைச் செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று இந்த சம்பவம் குறித்து திமுக சார்பில் தலைமைச் செயலாளர் சண்முகம் மீது திமுக எம்.பி.க்கள் புகார் அளித்துள்ளனர். திமுக எம்.பி.க்கள் புகார் தொடர்பாக விசாரிக்க மக்களவை உரிமைக் குழு செப்டம்பர் 24-ஆம் தேதி கூடுகிறது.

இந்த விவகாரத்தின்போது தயாநிதி மாறன் பேட்டியளிக்கையில், ''நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா'' என ஆர்வமிகுதியில் கேட்டார். இது மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக மூத்த நிர்வாகிகள் பலரை அதிர்ச்சியடையச் செய்தது. இந்தப்பேச்சு கூட்டணி கட்சிகளையும் கலங்கடித்தது. விசிக தலைவர் திருமாவளவன், இந்த வார்த்தையை சுட்டிக்காட்டி  ட்வீட் வெளியிட்ட அடுத்த ஒரு மணி நேரத்தில் மன்னிப்பு கோரி தயாநிதி மாறன் ட்வீட் வெளியிட்டார். இந்நிலையில் அதே விவகாரத்தை மீண்டும் விவாதிக்க கூடும்போது, தாழ்த்தப்பட்டவர்களா எனப்பேசிய விவகாரமும் மீண்டும் எழும். இது திமுகவுக்கே பின்னடைவை ஏற்படுத்தும் என்பது ரத்தத்தின் ரத்தங்களுக்கு புரியாதா? எனக் கேட்கிறார்கள் கருப்பு, சிவப்பு கொடிக்கு உரிமையானவர்கள்.
 

click me!