ஆராய்ச்சி மாணவர்களுக்கு அண்ணாவின் பெயரால் வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை நிறுத்தம்: அண்ணா பல்கலை அதிர்ச்சி.

By Ezhilarasan BabuFirst Published Sep 19, 2020, 4:49 PM IST
Highlights

அண்ணா நூற்றாண்டு ஆராய்ச்சி திட்டத்தின் (ஏ.சி.ஆர்.எஃப்) கீழ் ஆராய்ச்சி படிப்பு (Ph.D)மேற்கொள்ளும் மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 16 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையும்,  ஆண்டுக்கு 25 ஆயிரம் வரையும் வழங்கப்பட்டு வந்த உதவித்தொகையை ரத்து செய்வதாக அண்ணா பல்கலைக்கழக இயக்குனர் கே.பி ஜெயா அறிவித்துள்ளார்.

அண்ணா நூற்றாண்டு ஆராய்ச்சி திட்டத்தின் கீழ்(ACRF)ஆராய்ச்சி மாணவர்களுக்கு (Phd) வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை ரத்து செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது கண்டனத்திற்குரியது எனவும் இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் எனவும் கேம்பஸ் ஃப்ரண்ட் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து கேம்பஸ் ஃப்ரண்ட் மாநில தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, மத்தியில் ஃபாசிச பாஜக அரசு பதவியேற்றதிலிருந்து தொடர்ந்து மாணவர் விரோத போக்கை கையாண்டு வருகின்றது. புதிய கல்விக் கொள்கை, அனைத்து  துறைகளிலும் மாணவர்களுக்கு பொது நுழைவுத்தேர்வு, என மாணவர்களை கல்வி கற்க விடாமல் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. 

அந்த வகையில் மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பெயரில் அண்ணா பல்கலைக்கழகத்தில் அண்ணா நூற்றாண்டு ஆராய்ச்சி திட்டத்தின் (ஏ.சி.ஆர்.எஃப்) கீழ் ஆராய்ச்சி படிப்பு (Ph.D)மேற்கொள்ளும் மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 16 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையும்,  ஆண்டுக்கு 25 ஆயிரம் வரையும் வழங்கப்பட்டு வந்த உதவித்தொகையை ரத்து செய்வதாக அண்ணா பல்கலைக்கழக இயக்குனர் கே.பி ஜெயா அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது ஆண்டு செலவினங்களை குறைக்கும் வகையில் ரத்து செய்யப்படுவதாகவும், மேலும் இந்த நடைமுறை ஜனவரி 2021 முதல் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.இதை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கின்றது.  

செலவினங்களை காரணம் காட்டி Ph.D மாணவர்களின் உதவித்தொகையை ரத்து செய்வது, ஏழை, எளிய மாணவர்களின் கல்வியை ஒடுக்கும் செயலாகவே கேம்பஸ் ஃப்ரண்ட் பார்க்கிறது. எனவே இந்த அறிவிப்பை உடனடியாக அண்ணா பல்கலைக்கழகம் திரும்பப்பெற வேண்டும் எனவும்,  Ph.D மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை தொடர்ந்து வழங்க வேண்டும் எனவும், மேலும் அனைத்து துறை சார்ந்த மாணவர்களுக்கும் அளிக்கப்படும் உதவித்தொகையை எந்தவித நிபந்தனையுமின்றி அண்ணா பல்கலைக்கழகம் கொடுக்க வேண்டும் எனவும் கேம்பஸ் ஃப்ரண்ட் வலியுறுத்துகின்றது. இதனை தவறும் பட்சத்தில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சட்டம் மற்றும் களப்போராட்டங்களை முன்னெடுக்கும் எனவும் தெரிவித்துக்கொள்கிறது என அதில் கூறப்பட்டுள்ளது. 

 

click me!