லஞ்சம் கொடுத்து தான் துணை வேந்தரானீர்களா.? பதவி விரும்பி பாலகுருசாமிக்கு நாவடக்கம் தேவை!கடுமையாக விளாசிய திமுக

By Ajmal KhanFirst Published Dec 11, 2022, 2:45 PM IST
Highlights

நீட் ஆதரவு; மாநில உரிமையை கைவிடுவது; இந்தியை திணிப்பது என்று ஒன்றிய அரசிற்கு ஜால்ரா அடித்து புதிய பதவிக்கான நுழைவுத் தேர்வை எழுதிக் கொண்டிருக்கிறார் அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி! என தி.மு.க. மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

பதவி விரும்பி பாலகுருசாமி

மாநில அரசுகளென்றால் ஊழலென்றும், ஒன்றிய அரசென்றால் யோக்கிய சிகாமணி போலும் பேசும் காவிக் கல்வியாளர், பதவி விரும்பி பாலகுருசாமிக்கு நாவடக்கம் தேவை! என திமுக மாணவர் அணிச்செயலாளர் எழிலரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய அரசு தும்மினால் ஆதரவு, இருமினால் வரவேற்பு என்று இரண்டு கைகளை, காலாக்கி நாட்டியமாடிக் கொண்டிருக்கிறார் அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பதவி விரும்பி பாலகுருசாமி. தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்தவர், நீட் தேர்வை ஆதரித்தவர், இந்தி திணிப்பை ஆதரித்தவர், இப்போது பல்கலைக் கழக துணை வேந்தர் தேர்விலும் மூக்கை நுழைத்து, மோடி அரசிற்கு தனது விசுவாசத்தை காண்பித்து, வயதான காலத்திலும் பதவி வெறி பிடித்து அலைகிறார் இந்த ஸ்வாமி! 

புயலையே சந்திக்கிற ஆற்றல் திராவிட மாடல் ஆட்சிக்கு உள்ளது.!நான் சாதாரண ஸ்டாலின் இல்லை.! முதலமைச்சர் அதிரடி

 வாய் பொத்தி வேடிக்கை பார்க்க வேண்டுமாம்

இரண்டொரு நாட்களுக்கு முன்பாக அவர் வெளியிட்ட அறிக்கையொன்றில், ஆளுநர்கள் அல்லாமல் மாநில அரசே, துணைவேந்தர்களை தேர்ந்தெடுக்கும், கண்காணிக்கும் என்ற தமிழ்நாடு அரசின் இரண்டு மசோதாக்களை கடுமையாக தாக்கியிருக்கிறார் இந்த பதவி விரும்பி பாலகுருசாமி.  மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆட்டுத்தாடி ஆளுநர்கள், தமிழ்நாடு பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர் யார் என்பதை முடிவு செய்வார்களாம்.  அதை, தமிழ்நாட்டு மக்கள் கண்மூடி, வாய் பொத்தி வேடிக்கை பார்க்க வேண்டுமாம்.  ஆன்லைன் சூதாட்ட ஊழலிலேயே ஆளுநரின் முகத்திரை கிழிந்து தொங்கும் போது, இந்த ஆளுநர்கள் நேர்மையாக இருப்பார்களாம், அவர்கள் பல்கலைக் கழக துணை வேந்தர்களை மிக மிக நேர்மையாக தேர்ந்தெடுப்பார்களாம்.

 ஆளுநருக்கு பாலகுருசாமி ஆதரவு

    தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரம் தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கே உண்டு என்பதை உறுதி செய்தது.  இது பொறுக்காத பதவி விரும்பி பாலகுருசாமி, பல்கலைக் கழக மானியக் குழுவிற்கு எழுதிய கடிதத்தில் தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் துணை வேந்தர்களை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் சென்றால், ஊழல் பெருகிவிடும், நாடு அழிந்துவிடும் என்று ஒப்பாரி வைக்கிறார்.  ஆளுநருக்கு, இந்த ஒட்டுத்தாடி பதவி விரும்பி பாலகுருசாமி ஆதரவு!

ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை.. கோவையில் திமுக ஒட்டிய பரபரப்பு போஸ்டர் !

   லஞ்சம் கொடுத்து தான் துணைவேந்தரானீர்களா.?

  இந்த பதவி வெறி பாலகுருசாமியிடம், தி.மு.க. மாணவர் அணி கேட்க விரும்புவது ஒன்றுதான்! பல்கலைக் கழக துணை வேந்தர்கௌல்லாம் லஞ்சம் கொடுத்து தான் பதவிக்கு வருவார்கள் என்றுச் சொன்னால், நீங்கள் அண்ணா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக பதவியில் அமர்ந்த போது, எவ்வளவு லஞ்சம் கொடுத்து அமர்ந்தீர்கள் என்று சொல்லமுடியுமா?  தமிழ்நாடு அரசின், திட்டக்குழு உறுப்பினராக நீங்கள் பதவி வகித்த போது, எவ்வளவு லஞ்சம் கொடுத்து பொறுப்பிற்கு வந்தீர்கள் என்று சொல்லமுடியுமா? லஞ்சம் கொடுத்து தான் பதவிக்க வந்தீர்கள் என்றுச் சொன்னால், லஞ்சம் கொடுத்ததை ஒப்புக் கொண்டு உடனே சிறைக்குச் செல்லுங்கள்! அமைச்சரின் உறவினர்களும், அமைச்சரின் தனி உதவியாளரும், பல்கலைக் கழக துணை வேந்தர்களாகி விட்டார்கள் என்று உள்ளம் கொதிக்கிறார் இந்த பதவி விரும்பி பாலகுருசாமி! இப்போதும், உங்கள் ஆளுநர் தானே பல்கலைக் கழக துணை வேந்தரை அமர்த்துவதற்கு பொறுப்பு.  தகுதி இல்லாத நபரை ஏன் பதவியில் அமர்த்தினார் உங்கள் ஆளுநர்.

 பல்கலைக் கழகங்கள், அந்தந்த மாநில அரசுகளால் உருவாக்கப்பட்டவை.  அந்தந்த மாநில மக்கள் தங்கள் சொந்த உழைப்பாலும், வியர்வையாலும், அவர்கள் செலுத்திய வரியினாலும் கட்டி எழுப்பப்பட்டவை அவை.  அதன் பல்கலைக் கழக துணை வேந்தரை நிர்ணயிக்கும் உரிமை அவர்களுக்கு மட்டுமே உண்டு.  அவர்களால், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கே உண்டு.  அதுபோக, பல்கலைக் கழகங்களின் நிர்வாகத்தை மேலாண்மை செய்ய கல்விக் குழுக்கள், செனட் குழு, சிண்டிகேட் குழு என்று பல கமிட்டிகள் இருந்தும் உங்கள் சர்வாதிகார ஜால்ரா, உங்கள் அறிவை மறைத்து, துணை வேந்தருக்கு மட்டுமே வானளாவிய அதிகாரம் படைத்தவர் என்று புலம்ப வைக்கிறது.

தொடரும் தமிழக காவல்துறையின் அடக்குமுறை.. போராட்டத்தில் குதித்த பாஜக - அண்ணாமலை அறிவிப்பு !

நாவட்டக்கம் தேவை

மாநில சுயாட்சி என்ற மக்களாட்சி தத்துவத்தின் மீது, தாக்குதல்கள் நடத்தி, வயதான காலத்தில் பதவியை அடையும் ஆசையை விட்டுவிட்டு அமைதியாக இருக்கலாம்.  அதைவிட்டு, பள்ளிக் கூடங்களிலும், பல்கலைக் கழகங்களிலும் உங்கள் பதவி வெறி மோகத்திற்காக, காவி அரசியலை கொண்டு வந்தால், தி.மு.க. மாணவர் அணி பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது! உங்களின் தமிழ் விரோத, மக்கள் விரோத, ஜனநாயக விரோ போக்குகளை பார்க்கும் போது, “நாயும், வயிறு வளர்க்கும்; வாய்ச்சோற்றை பெரிதென்று நாடலாமோ” என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகள் தான் ஞாபகம் வருகிறது. ஆகவே நாவை அடக்குங்கள், திரு பால குருசாமி அவர்களே! என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

புயலையே சந்திக்கிற ஆற்றல் திராவிட மாடல் ஆட்சிக்கு உள்ளது.!நான் சாதாரண ஸ்டாலின் இல்லை.! முதலமைச்சர் அதிரடி

 

click me!