குறைந்தபட்ச முக்கியத்துவத்தைக்கூடத் தரமறுக்கும் திமுக அரசு... அதிமுக அரசை நியாயப்படுத்தி சீமான் சீற்றம்..!

Published : Jun 18, 2021, 06:08 PM IST
குறைந்தபட்ச முக்கியத்துவத்தைக்கூடத் தரமறுக்கும் திமுக அரசு... அதிமுக அரசை நியாயப்படுத்தி சீமான் சீற்றம்..!

சுருக்கம்

அதிமுக ஆட்சியில்கூடத் தமிழ் வளர்ச்சித்துறைக்கெனத் தனி அமைச்சரை நியமித்துத் தனித்துவமாகச் செயல்படுவதற்கான வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில், அத்தகைய குறைந்தபட்ச முக்கியத்துவத்தைக்கூடத் தரமறுத்துள்ளது திமுக அரசு.

செம்மொழியாம் தமிழ்மொழிக்கு ஒன்றிய அரசின் அங்கீகாரத்தைப் பெறுவதனாலோ, அரசு அலுவலகங்களின் உயரத்தில் பெயரளவுக்கு, ‘தமிழ் வாழ்க’ எனப் பெயர்ப்பலகை வைப்பதினாலோ மட்டும் தமிழ் நிலைபெற்று விடுவதில்லை என்பதனை தமிழ்நாடு அரசு உணரவேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்மொழியின் வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட அமைச்சகமான ‘தமிழ் வளர்ச்சித்துறை’ அமைச்சகத்தை எவ்வித முன்னறிவிப்புமின்றி, ‘தமிழ் ஆட்சி மொழி மற்றும் பல தமிழ்ப்பண்பாட்டுத்துறை’ எனப் பெயர் மாற்றம் செய்து அதனைத் தொழிற்துறை அமைச்சருக்கு கூடுதல் பொறுப்பாய் அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இன்னுயிர் தமிழைக் காக்க நடந்தேறிய மொழிப்போர் ஏற்படுத்திய அரசியல் தாக்கத்தை மூலதனமாகக் கொண்டு ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய திமுக, தமிழ் மொழிக்கென இருக்கும் ஒரே அமைச்சகத்தையும் மெல்ல உருமாற்றிச் சிதைக்கும் வேலையில் ஈடுபடுவது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்ப்பண்பாட்டு விழுமியங்களை மீட்கவும், தொல்லியல் கூறுகளைக் காக்கவும் செயல்பட அரசுக்கு நோக்கமிருந்தால் அதற்கெனத் தனியாக ஒரு அமைச்சகத்தை உருவாக்கியிருக்கலாம். அதனைவிடுத்து, மொழி வளர்ச்சிக்கென இருந்த ஒரே அமைச்சகத்தை, ‘பண்பாட்டுத்துறை’ என மாற்றிப் பொதுமைப்படுத்தியிருப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. மொழி வளர்ச்சியைப் பண்பாட்டுத்துறையின் கீழுள்ள பல்வேறு பணிகளில் ஒன்றாக மாற்றியிருப்பதனால் மொழிக்கான தனித்துவ வளர்ச்சிப்பணிகள் யாவும் பாதிக்கப்பட்டு, மொழிக்கான முக்கியத்துவம் குறையும்படி ஆகிவிடும் எனும் அச்சம் நிலவுவதைத் தவிர்க்க இயலவில்லை.

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த தொன்மைப் பெருமைகள் பல நிறைந்த உலகின் முதுமொழியான தமிழ்மொழியே, மானுடச்சமூகத்தின் முதல் மொழியென உலக மொழியியல் அறிஞர்களால் நிறுவப்பட்டு வரும் நிலையில், அம்மொழி தமிழர்களின் பெருத்த தாய்நிலமான தமிழ்நாட்டில் இன்றுவரை வழிபாட்டு மொழியாகவோ, வழக்காட்டு மொழியாகவோ, பண்பாட்டு மொழியாகவோ, பயன்பாட்டு மொழியாகவோ, ஆட்சி மொழியாகவோ, அதிகார மொழியாகவோ இல்லாத கொடுஞ்சூழல் நிலவுவது தமிழ்த்தேசிய இனத்திற்கு நிகழ்ந்த வரலாற்றுப் பெருந்துயரமாகும். ‘மணக்கவரும் தென்றலிலே குளிரா இல்லை? தோப்பில் நிழலா இல்லை? தணிப்பரிதாம் துன்பமிது தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழ்தான் இல்லை’எனப் புரட்சிப்பாவலர் பாரதிதாசன் வருந்திப்பாடி, 70 ஆண்டுகளைக் கடந்தும் தமிழகத்தின் வீதிகளில் பெயர்ப்பலகைகூடத் தமிழில் இல்லாதிருப்பது எந்தவொரு இன மக்களுக்கும் நிகழ்ந்திடக்கூடாப் பெருங்கொடுமையாகும். ஆகவேதான், அந்நிய மொழிகளின் ஆதிக்கத்திலிருந்தும், படையெடுப்பிலிருந்தும் தாய்த்தமிழை மீட்கவும், தமிழ் மக்களிடத்தில் மொழிப்பற்றினை மீட்டுருவாக்கம் செய்யவும் ‘தமிழ் வளர்ச்சித்துறை’ அமைச்சகம் இருக்க வேண்டியது பேரவசியமாகிறது.

மக்களாட்சித்தத்துவத்தின் அடிப்படையில், ஒரு மாநிலத்தில் அல்லது நாட்டில் பெரும்பான்மையான மக்களால் பேசப்படும் மொழிதான் ஆட்சி மொழியாக அமைதல் வேண்டும் எனும் அடிப்படையில் தமிழ்நாட்டில் தமிழ்தான் ஆட்சி மொழி என்று 27.12.1956ல் சட்டம் நிறைவேற்றப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது. சட்டமியற்றிய பின்னும், ஏட்டளவில் மட்டுமே தமிழ் ஆட்சிமொழியாக இருந்ததே தவிர, நிர்வாக அளவில் அது எட்டாக்கனியாகவே இருந்ததை உணர்ந்து, தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை அரசு அலுவலகங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு, ஆட்சிமொழிக்குழுவொன்றை 1957 ஆம் ஆண்டில் அமைத்தது. இதனையடுத்து, தமிழ்மொழியை தமிழ்நாட்டின் ஆட்சிமொழியாக முழுமையாக நடைமுறைப்படுத்தவும், துறைகள் தோறும் தமிழ் வளர்ச்சியை ஊக்குவிக்கவுமென ஆட்சிமொழிக்குழுவின் பணிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, தமிழ் வளர்ச்சித்துறை எனும் தனித்துறை 1971 ஆம் ஆண்டுத் தோற்றுவிக்கப்பட்டது.

தமிழ் வளர்ச்சித்துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககமானது, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்ப்பல்கலைக்கழகம், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், அறிவியல் தமிழ் மன்றம், உலகத் தமிழ்ச் சங்கம், தலைமைச் செயலக மொழிபெயர்ப்புப் பிரிவு எனும் பல்வேறு அமைப்புகளின் வழியாகத் தமிழ்மொழி வளர்ச்சிக்கான முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது. இவையனைத்தும் தமிழ் வளர்ச்சித்துறை எனும் பெயரில் மொழிக்கென உள்ள தனி அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சியாகச் செயல்பட்ட காரணத்தினாலேயே அவை எளிதாக நடைமுறைப்படுத்தப்பட வாய்ப்பமைந்தது. அப்படிச் சிறப்பாகச் செயல்பட்ட தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சகத்தைத் தற்போது தமிழ்ப்பண்பாட்டுத்துறை என மாற்றியிருப்பது மிகத்தவறான நிர்வாக முடிவாகும். மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்தி மற்றும் சமற்கிருத மொழியைப் பல்வேறு சூழ்ச்சிமிகு வழிகளில் தமிழ்நாட்டில் திணிப்பதற்கான பணிகளை முனைப்போடு மேற்கொள்கின்ற தற்போதைய இக்கட்டான காலக்கட்டத்தில் முன்பைவிட இன்னும் வீரியமாகத் தமிழ் வளர்ச்சித்துறைக்கு முன்னுரிமை கொடுத்து, அதனை முதன்மையான துறையாக விளங்கிடச் செய்யும் பணிகளில் ஈடுபடாமல், அந்தத் துறையின் பெயரையே, ‘தமிழ்ப்பண்பாட்டுத்துறை’ என மாற்றியமைத்துத் தமிழ் மொழியின் வளர்ச்சியைப் பின்னோக்கி தள்ளியிருப்பது வருத்தமளிக்கிறது.

கடந்த அதிமுக ஆட்சியில்கூடத் தமிழ் வளர்ச்சித்துறைக்கெனத் தனி அமைச்சரை நியமித்துத் தனித்துவமாகச் செயல்படுவதற்கான வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில், அத்தகைய குறைந்தபட்ச முக்கியத்துவத்தைக்கூடத் தரமறுத்து, மொழி வளர்ச்சித்துறையைத் தொழிற்துறை அமைச்சகப் பொறுப்பை வகிப்பவருக்குக் கூடுதல் பொறுப்பாகத் தற்போதைய அரசு அளித்திருப்பது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது. இதிலிருந்து மொழிக்கெனத் தனி அமைச்சகம் இருப்பதை ஆளும் திமுக அரசு விரும்பவில்லையோ? என்ற ஐயம் எழுகிறது. செம்மொழியாம் தமிழ்மொழிக்கு ஒன்றிய அரசின் அங்கீகாரத்தைப் பெறுவதனாலோ, அரசு அலுவலகங்களின் உயரத்தில் பெயரளவுக்கு, ‘தமிழ் வாழ்க’ எனப் பெயர்ப்பலகை வைப்பதினாலோ மட்டும் தமிழ் நிலைபெற்று விடுவதில்லை என்பதனை தமிழ்நாடு அரசு உணரவேண்டும்.
 
ஆகவே, இனியாவது ஆளும் திமுக அரசு தனது தவறினை உணர்ந்து தமிழ் வளர்ச்சிக்கான பணிகளை முன்பைவிட வேகமாகச் செய்வதற்கு, தமிழ் வளர்ச்சித் துறையை இன்னும் அதிக அதிகாரங்களுடன் மீண்டும் தனித்துறையாக உருவாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வேறொரு துறையின் கீழ் கூடுதல் பொறுப்பாகத் தமிழ் வளர்ச்சித்துறைத் துறையை ஒப்படைத்து தமிழ்மொழியை அவமதிக்கும் செயலைக் கைவிட்டு, அத்துறை சார்ந்த ஆற்றல் கொண்டவரை அமைச்சராக நியமிக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

களத்திற்கே வராத விஜய் களத்தை பற்றி பேசலாமா? இடைத்தேர்தல் நடக்கும்போது எங்க போனீங்க..? சீமான் கேள்வி
அல்லாஹவிடம் ஒப்படைக்கிறோம்..! ஹாதியின் மந்திரம் தொடர்ந்து எதிரொலிக்கும்..! உஸ்மான் இறுதிச் சடங்கில் யூனுஸ் சூளுரை..