
திமுக செயல் தலைவராக ஸ்டாலின் இருக்கும்வரை திமுகவால் வெற்றி பெற முடியாது எனவும் இதற்கு முன்னாள் திமுக உறுப்பினரும் சகோதரருமான அழகிரியே சர்டிஃபிகேட் கொடுத்துள்ளார் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக இரண்டு அணிகளாக பிளவுபட்டு போட்டியிட்ட நிலையிலும், திமுக வெற்றி பெறாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், திமுகவின் முன்னாள் தென்மண்டல அமைப்பாளரான மு.க.அழகிரி, திமுகவில் மாறுதல் தேவை என்று கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் இழக்கும் அளவுக்கு திமுக தோற்றது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் வெற்றி பெற்ற தினகரனுக்கு ராதாரவி வாழ்த்து சொல்கிறார். இதற்கு அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இவர் போன்றவர்களுக்குத்தான் திமுகவில் பொறுப்பு கொடுத்திருக்கிறார்கள். சுயநலத்துடன் கட்சியில் இருப்பவர்களை மாற்ற வேண்டும். உண்மையான விசுவாசிகளுக்கு பொறுப்புகள் வழங்க வேண்டும். ஆனால், அதெல்லாம் இப்போது நடக்குமா? என்று அழகிரி கேள்வி எழுப்பினார்.
வைகோ என்னை சந்தித்ததற்காக என் மீது நடவடிக்கை எடுத்ததாக சொன்னார்கள். அதே வைகோ, முரசொலி பவள விழாவுக்கு அழைக்கப்பட்டார்; ஸ்டாலின் முதலமைச்சராவால் என்று இப்போது கூறுகிறார். இப்போது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே என்று காட்டமாக கூறினார். இதே வைகோ, கருணாநிதியை, எவ்வளவு இழிவாக பேசினார் என்பதை மறந்து விட்டார்கள். ஆளுக்கொரு நியாயம்...! என்றார்.
இந்நிலையில், திமுக செயல் தலைவராக ஸ்டாலின் இருக்கும்வரை திமுகவால் வெற்றி பெற முடியாது எனவும் இதற்கு முன்னாள் திமுக உறுப்பினரும் ஸ்டாலின் சகோதரருமான அழகிரியே சர்டிஃபிகேட் கொடுத்துள்ளார் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.