
பாரதிய ஜனதா கட்சி, அதிமுக அரசிடம் இருந்து விலகி நிற்க தோன்றுகிறதோ என்ற ஐயம் எழுவதாக பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கூறியுள்ளார். ஆடிட்டர் குருமூர்த்தி - அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு குறித்து தராசு ஷ்யாம் இவ்வாறு கூறியுள்ளார்.
ஆடிட்டர் குருமூர்த்தி, முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் impotent என கூறி பேசியதை அமைச்சர் ஜெயக்குமார் “impotent” என்ற வார்த்தையை அவர் எப்படி சொல்லலாம்? நாங்கள் ஆண்மை இல்லாதவர்களா? யாருக்கு ஆண்மை இல்லையோ அவர்களே மற்றவர்களை பார்த்து ஆண்மை இல்லை என்பார்கள். முதலில் குருமூர்த்திக்கு ஆண்மை இருக்கிறதா என செக் பண்ணி பார்க்கட்டும் என நேற்று பதிலடி கொடுத்திருந்தார்.
அமைச்சரின் இந்த பேட்டியை அடுத்து ஆடிட்டர் “impotent” என்ற வார்த்தையின் அர்த்தத்தை விளக்கமாக தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். நான் பேசியதன் அர்த்தம் புரியாமல் என்னை அவதூறாக அமைச்சர் பேசிய தெருப்பேச்சுக்கு நான் பதில் தெருப்பேச்சில் நான் ஈடுபட்டால் தான் நான் அவர் கூறிய பட்டதுக்கு ஏற்றவனாவேன் என அமைச்சருக்கு விளக்கமளித்தார் ஆடிட்டர் குருமூர்த்தி.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், “புறம்போக்கு” நிலம் என்பதை புறம்போக்கு என தனியாக சொன்னால் கோபம் வருமா? வராதா? என்றும் ஆடிட்டர் குருமூர்த்திக்கு பத்திரிகையாளர் என்ற பண்பு இருக்கும் என நம்புகிறேன் என்று பதிலடி கொடுத்தார்.
ஆடிட்டர் குருமூர்த்தியின் பேச்சுக்கு அதிமுக தரப்பில் இருந்து பல கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டு வருகிறது. குருமூர்த்தி மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு குறித்து, பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, பாரதிய ஜனதா கட்சி, அதிமுக அரசிடம் இருந்து விலகி நிற்க தோன்றுகிறதோ என்ற ஐயம் எழுவதாக கூறியுள்ளார். இதுபோன்ற வார்த்தைகளை அரசு ரீதியாக பயன்படுத்தக் கூடாது என்று தான் நினைப்பதாகவும் தராசு ஷ்யாம் கூறியுள்ளார்.