Chennai Floods: அந்த பயங்கரம் சென்னையை நெருங்கிவிட்டது.. தயவு செய்து யாரும் வெளியில் வராதீங்க..

By Ezhilarasan BabuFirst Published Nov 11, 2021, 9:55 AM IST
Highlights

சென்னையிலிருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 170 கிலோமீட்டர் தொலைவில் புதுச்சேரியில் இருந்து கிழக்கு திசையில் 170 கிலோமீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 40 கிலோ மீட்டர் முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்.. மக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம். தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் எச்சரிக்கை. வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருமாறியுள்ளது. அந்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்க உள்ளது. இன்று மாலை காரைக்கால்- ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே அது கரையை கடக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில்  இதன் தாக்கம் மிக அதிகமாக உணரப்படுகிறது. சென்னையில் நேற்று மாலை பெய்ய ஆரம்பித்த மழை விடிய விடிய சூறாவளிக் காற்றுடன் கொட்டித் தீர்த்து வருகிறது. மலை விட்டு விட்டு பெய்தாலும்  இன்னும் ஓயாமல் தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் மக்கள் வெளியில் வர முடியாத நிலை உள்ளது.

பல்வேறு  பகுதிகளில் வெள்ளம் கடல் போல காட்சியளிக்கிறது.  சென்னையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது தி நகர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை அதிக அளவில் பெய்துள்ளது, வேளச்சேரி, கோடம்பாக்கம் தி.நகர், நசரத்பேட்டை,  குன்றத்தூர், வளசரவாக்கம், போரூர், மதுரவாயல், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் முற்றிலுமாக முடங்கியுள்ளது. அடையார், திருவான்மியூர், பாலவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. இதனால் ஒட்டுமொத்த சென்னையும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தென்மண்டல வானிலை மைய தலைவர் பாலச்சந்திரன், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 40 கிலோ மீட்டர் முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், மக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார். வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே இன்று மாலை கரையை கடக்கிறது. 

சென்னையிலிருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 170 கிலோமீட்டர் தொலைவில் புதுச்சேரியில் இருந்து கிழக்கு திசையில் 170 கிலோமீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் காற்றழுத்த தாழ்வு  மண்டலத்தின் நகரம் வேகம் 27 கிலோ மீட்டரில் இருந்து 21 கிலோ மீட்டராக குறைந்துள்ளது என்றும், ஆனால் அது மெல்ல மெல்ல நகர்ந்து கரையை கடக்கும்போது  40 கிலோ மீட்டர் முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும், எனவே பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என எச்சரித்துள்ளார். அதேபோல தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மழையில் தத்தளிக்கிறது. குறிப்பாக கடலூர், நாகை, மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி உள்ளது என்றே கூறலாம். ஏராளமான நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

அதேபோல செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் சூறாவளி காற்றின் தாக்கம் உணரப்படுவதால் அந்த பகுதிகள் முழுவதும் மக்களின் பாதுகாப்புக் காரணம் கருதி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை வரை இதன் தாக்கம் தீவிரமாக இருக்கும் என்றும், இன்று ஒரு நாள் கடந்து விட்டால் ஆபத்து நீங்க வாய்ப்பிருப்பதாகவும் வெதர்மேன் பிரதீப் ஜான் வீடியோ வெளியிட்டுள்ளார். எனவே மக்கள் மிக கவனமாகவும், எச்சரிக்கையாகவும் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  இன்று மாலை தாழ்வு மண்டலம் கரையை கடந்தாலும் அதன் தாக்கத்தால் இன்று இரவு முழுக்க கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதே வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும் நிலை ஏற்பட்டால், நிலைமை மேலும் மோசமடைய வாய்ப்பிருப்பதாகவும் அஞ்சப்படுகிறது. 
 

click me!