தமிழகத்தில் மலரக்கூடிய ஆட்சி ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றும்...! மு.க.ஸ்டாலின்

Asianet News Tamil  
Published : May 08, 2018, 01:04 PM ISTUpdated : Sep 19, 2018, 02:20 AM IST
தமிழகத்தில் மலரக்கூடிய ஆட்சி ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றும்...! மு.க.ஸ்டாலின்

சுருக்கம்

The demands of the teachers fulfill the flowering regime - M.K.Stalin

தமிழகத்தில் மலரக்கூடிய ஆட்சியின்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று, கைது செய்யப்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினரை சந்தித்தப்பின் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக அரசு பழைய ஓய்வுதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையே உள்ள ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்திருந்தனர். இதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்க சென்னை புறப்பட்ட ஆசிரியர்களை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து, இன்று காலை சென்னை வாலாஜா சாலை, அண்ணா சாலை மற்றும் காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஒன்றுகூடி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், பங்கேற்ற ஆசிரியர்களை போலீசார் கைது செய்து, எழும்பூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் அடைத்து வைத்தனர். இந்த நிலையில், அந்தப் பள்ளியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தஞ்சை பாபநாசத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் தியாகராஜன் திடீரென மரணமடைந்துள்ளார். பார்வையற்ற மாற்றுத்திறனாளியான அவர், பாபநாசம் பள்ளியில் சிறப்பு ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

தியாகராஜனின் திடீர் மரணம் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசுதான் இந்த மரணத்துக்கு பொறுப்பேற்க வேண்டும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். தியாகராஜனின் உடலை பாபநாசம் கொண்டு செல்லும் முயற்சியில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். இதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, மக்களைப் பற்றியோ அரசு ஊழியர்களைப் பற்றியோ, ஆசிரியர்களைப் பற்றியோ கவலைப்படாத ஆட்சி எடப்பாடி பழனிசாமி ஆட்சி என்றார். தமிழகத்தில் விரைவில் மலரக்கூடிய ஆட்சியின்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றும் கூறினார். மேலும் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் அவர்களது கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

விஜய்யை திணறடித்த சிபிஐ.. தளபதியை தண்ணி குடிக்க வைத்த 'அந்த' 10 கேள்விகள்.. அடுத்த விசாரணை எப்போது?
அன்பில் மகேஷ் குக்கர்..! கே.என்.நேரு சாமான் செட்..! திமுகவின் தேர்தல் ஆட்டம் ஆரம்பம்..!