கொரோனா தொற்று முழுமையாக குறைந்த பிறகு ஸ்டெர்லைட் ஆலை குறித்து முடிவெடுக்கப்படும். அமைச்சர் அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Jul 8, 2021, 11:53 AM IST
Highlights

மேலும் மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது. கொரோனா தொற்று முழுமையாக குறைந்த பிறகு ஸ்டெர்லைட் ஆலை  குறித்து முடிவெடுக்கப்படும்.

கொரோனா தொற்று முழுமையாக குறைந்த பிறகு ஸ்டெர்லைட் ஆலை  குறித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை மருத்துவ கல்லூரியின் மறுசீரமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவ கல்லூரி மாணவர்களின் பயன்பாட்டிற்காக இன்று மறுசீரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.  ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 55,052 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். 2200 படுக்கைகள் கொண்ட ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், தற்போது 115 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

தமிழகம் முழுவதும் கரும்பூஞ்சை நோயால் 3590 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கரும்பூஞ்சை நோயால் 778 பேர் பாதிக்கப்பட்டு 216 நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 456 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதிதாக பதவியேற்றுள்ள ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் அனுமதி அளித்தால் இன்று மாலை டெல்லி பயணம் மேற்கொள்வோம். இல்லையெனில் சந்திக்க அனுமதி அளித்ததும் ஓரிரு நாட்களில் டெல்லி பயணம் மேற்கொண்டு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து தடுப்பூசி மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து வலியுறுத்தவுள்ளோம் என்றார். 

டெங்கு காய்ச்சலை தடுக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அனைத்து இடங்களிலும் கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. முதன்முறையாக நீர்நிலைகளில் கொசுக்களை அழிக்க ட்ரோன்களை பயன்படுத்தி நீர்நிலைகளில் கொசுக்கள் உற்பத்தியை தடுத்து வருகிறோம். டெங்கு காய்ச்சலால் ஜனவரி முதல் தற்போது வரை 2090 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது. கொரோனா தொற்று முழுமையாக குறைந்த பிறகு ஸ்டெர்லைட் ஆலை  குறித்து முடிவெடுக்கப்படும். 

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று மாலை டெல்லி சென்று ஒன்றிய சுகாதாரத்துறை செய்லாளர்களுடன் தடுப்பூசி குறித்து வலியுறுத்தவுள்ளார். தமிழகத்திற்கு இதுவரை 1,59,26,050 தடுப்பூசி வந்துள்ளது. 1,59,58,420 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 1,74,730 கையிருப்பில் உள்ளது இன்று மாலை வரை இந்த தடுப்பூசிகள் போதுமானது எனவும் அடுத்து 11ஆம் தேதி தான் தடுப்பூசிகள் வர உள்ளது என்றார். மேலும், செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி ஆலை டெண்டர் எடுக்க யாரும் முன் வராதது கடந்த ஆட்சி காலத்தில் தற்போது ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்கும் போது வலியுறுத்தப்படும் என தெரிவித்தார்.
 

click me!