தந்தை மகன் மரணம்.. காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஏஎஸ்பி, டிஎஸ்பிக்கு உடனடி பதவி.. அதிர்ச்சியில் மக்கள்.!!

By T BalamurukanFirst Published Jun 30, 2020, 11:32 PM IST
Highlights

சாத்தான்குளம் தந்தை மகன் மரண விவகாரத்தில் குற்றவியல் நடுவர் விசாரணையின்போது அவர் மிரட்டப்பட்டதாக எழுந்த புகாரில் மாற்றப்பட்ட தூத்துக்குடி ஏஎஸ்பி, டிஎஸ்பி இருவருக்கும் 12 மணி நேரத்தில் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

சாத்தான்குளம் தந்தை மகன் மரண விவகாரத்தில் குற்றவியல் நடுவர் விசாரணையின்போது அவர் மிரட்டப்பட்டதாக எழுந்த புகாரில் மாற்றப்பட்ட தூத்துக்குடி ஏஎஸ்பி, டிஎஸ்பி இருவருக்கும் 12 மணி நேரத்தில் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி, சாத்தான்குளத்தில் பென்னிக்ஸ் அவரது தந்தை ஜெயராஜ் ஊரடங்கு நேரத்தை மீறி செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததால்  போலீஸாரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் காயங்களுடன் கோவில்பட்டி கிளைச்சிறையில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டதில் இருவரும் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது வருகின்றது.
இந்தியா முழுவதும் பல தரப்பிலும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த இருவர் மரணத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கண்டித்தன. தூத்துக்குடி மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தினர். சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய அனைவரும் கோரிக்கை வைத்தனர். உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து வழக்கைக் கையில் எடுத்து விசாரித்து வருகிறது.

மாநில மனித உரிமை ஆணையமும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அகில இந்திய அளவில் ராகுல் காந்தி முதல் சினிமா, கிரிக்கெட் பிரபலங்கள் இவ்விவகாரத்தில் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்தனர். சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய கோரிக்கை வலுத்துவந்தது. மெடிக்கல் ரிப்போர்ட் கொடுத்த பெண் டாக்டர் திடீரென விடுமுறையில் சென்றுள்ளார். தடையங்கள் ஆங்காங்கே மறைக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் வருகின்றது.

இந்நிலையில், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வழக்கு விசாரணைக்குச் சென்ற மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசனை மிரட்டியதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து எஸ்.பி.பாலகோபாலன், ஏஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

எஸ்.பி. அருண்பாலகோபாலன் இந்தச் சம்பவத்தைக் கையாண்ட விதம் குறித்து விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் எஸ்.பி. அருண்பாலகோபாலன் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். ஏஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.தூத்துக்குடி எஸ்.பி.யாக விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஏஎஸ்பி குமார் மற்றும் டிஎஸ்பி பிரதாபனுக்கு உடனடியாக பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை டிஜிபி அலுவலகம் பிறப்பித்துள்ளது.

 தூத்துக்குடி ஏஎஸ்பியாக பதவி வகித்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட குமார் நீலகிரி மாவட்ட மதுவிலக்கு அமல் ஏஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.தூத்துக்குடி டிஎஸ்பியாக இருந்து காத்திருப்போர் பட்டியலில் உள்ள பிரதாபன் புதுகோட்டை மாவட்ட நில அபகரிப்பு பிரிவு டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.நீலகிரி மாவட்ட மதுவிலக்கு அமல் கூடுதல் டிஎஸ்பி கோபி தூத்துக்குடி மாவட்ட பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு கூடுதல் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.கள்ளக்குறிச்சி சப் டிவிஷன் டிஎஸ்பி ராமநாதன் சாத்தான்குளம் சப்டிவிஷன் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

click me!