
ஆர்.கே.நகரில் இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் செய்ய காலக்கெடு முடிகிறது. இதனால் ஆர்.கே.நகர் முழுவதும் அதிமுக திமுக டிடிவி தரப்பு பிரச்சாரங்கள் களை கட்டுகின்றன.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக சார்பில் மருது கணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், சுயேட்சையாக டி.டி.வி.தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம், பாஜக சார்பில் கரு,நாகராஜன் உள்ளிட்ட 59 பேர் களத்தில் உள்ளனர்.
இந்த வேட்பாளர்கள் அனைவரும் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பணப்பட்டுவாடா, தேர்தல் விதிமுறைகள் மீறல் போன்ற பிரச்சனைகள் இருந்த போதிலும் தேர்தல் கட்டாயம் நடக்கும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
இன்று மாலை 5 மணியுடன் இங்கு தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. இதனால் இன்று அதிகாலை முதலே அனைத்து வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து எம்.பி. எம்.எல்.ஏக்களும், திமுக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து ஸ்டாலினும், சுயேட்சை வேட்பாளராக டிடிவி தினகரன் உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இறுதிகட்ட பரப்புரையில் அனைத்து தரப்பினரும் தங்களது வாக்குறுதிகளை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.