
தமிழக அரசியல் நடைமுறையின் சகாப்தத்தை மாற்றியமைக்கிறார் டி.டி.வி.தினகரன் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு சுயேட்சை வேட்பாளராக அவர் கலக்கியெடுப்பதை செம்ம லோக்கலாய் சொல்வதென்றால்...தட்டி எறிகிறார், தரையிறங்கி தகர அடி அடிக்கிறார் மனிதர்.
இதை வெற்றிவேல், நாஞ்சில் சம்பத், புகழேந்தி போன்றோர் மட்டும் சொல்லவில்லை. ஆர்.கே.நகர் மக்களும் சொல்கிறார்கள், அங்கே சர்வே எடுக்கும் அமைப்புகளும் சொல்கின்றன.
‘ஆர்.கே.நகர் ரேஸில் இப்போதைக்கு முந்துவது தினகரனே!’ என்று கடந்த வாரத்தில் கருத்துக்கணிப்பு பட்டாசுக்கு திரிகிள்ளி இருந்தார் ராஜநாயகம். என்னதான் லயோலா ‘இது எங்க கருத்தில்லை’ என்று மறுத்தாலும், ராஜநாயகத்தின் கருத்து எல்லா மட்டங்களிலும் ஆழ இறங்கியது.
இந்நிலையில் பிரபல புலனாய்வு வார இதழ் நடத்தியிருக்கும் கருத்துக் கணிப்பும் இன்றைய லெவலுக்கு ‘தினகரனுக்கே ஜெயம்’ என்கிற அளவில்தான் ரிசல்டை தந்திருக்கிறது.
ஆர்.கே.நகரின் மொத்த வாக்காளர்கள்: ரெண்டு லட்சத்து இருபத்து எட்டாயிரம்.
ஆண்கள்: ஒரு லட்சத்து பத்தாயிரத்து சொச்சம்.
பெண்கள்: ஒரு லட்சத்து பதினேழாயிரத்து சொச்சம்.
3ம் பாலினம்: சுமார் 100.
ஆர்.கே.நகர் முழுக்க சுற்றிச் சுற்றி ஐந்தாயிரத்து ஐநூற்று முப்பது பேரிடம் ஐந்து நாட்களாக நின்று நிதானமாக எந்த பிரஷரும் இல்லாமல் நேர்மையாக கருத்துக்கணிப்பை நடத்தியிருக்கிறார்கள்.
கேட்கப்பட்ட கேள்விகள் ஜஸ்ட் 4.
அதன் விபரங்கள்:
இந்த தேர்தலில் விஷால் போட்டியிட்டிருந்தால் என்னவாகியிருக்கும்? எனும் கேள்விக்கு சுமார் 50% பேர் ‘டெப்பாசீட் போயிருக்கும்.’ என்றும், 38.5% பேர் ’வாக்குகளை பிரித்திருப்பார்’ என்றும், 12.6% பேர் ‘நிச்சய வெற்றி’ என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
ஆளுங்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு எப்படியிருக்கிறது? எனும் கேள்விக்கு...சுமார் 48%பேர் ’கடும் போட்டி’ என்றும், 34%பேர் ‘தோல்வி’ என்றும், 18% பேர் மட்டுமே ‘வெற்றி வாய்ப்பு பிரகாசம்’ என கூறியிருக்கிறார்கள்.
ஆர்.கே.நகரில் உங்கள் ஓட்டு யாருக்கு? எனும் மிக முக்கியமான கேள்விக்கு...தினகரனுக்கே வாக்களிப்போம் என 27.5% பேரும், அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பதாக 26.9% பேரும், தி.மு.க.வுக்கு ஆதரவாக 24.8% பேரும், நாம் தமிழருக்கு ஆதரவாக 5.1% பேரும், பி.ஜே.பி.க்கு ஆதரவாக 0.5% பேரும், மற்றவர்களுக்கு ஆதரவாக 15.2% பேரும் வாக்களித்திருக்கிறார்கள்.
ஆக இதை, ’இழுபறியில் முந்துகிறார் டி.டி.வி. தினகரன்’ என கொட்டை எழுத்துக்களில் குறிப்பிட்டுள்ளது அந்த புத்தகம்.
தினகரனுக்கு ஆண்கள், பெண்கள் என இரண்டு தரப்பிலும் சம ஆதரவு நிலவுகிறது ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. அ.தி.மு.க.வுக்கு ஆண்களை விட பெண்கள் ஆதரவு அதிகமாக உள்ளது. தி.மு.க.வுக்கு இதே நிலைதான். பி.ஜே.பி.க்கு சுத்தமாகவே பெண்கள் வாக்கு இல்லை. நாம் தமிழர் கட்சிக்கு பெண்களை விட ஆண்கள் ஆதரவு அதிகமிருப்பதையும் இந்த சர்வே சுட்டிக் காட்டுகிறது.
‘இந்த சர்வே ஒவ்வொரு ஓட்டுக்கும் கரன்ஸி பாய்ச்சலுக்கு முன்பு எடுக்கப்பட்டது.’ என்று சர்வே நடத்திய இதழ் கூறியுள்ளது. ஆனால் ஆர்.கே.நகரில் வேட்பு மனு தாக்கல் ஆனதிலிருந்தே பணம் விளையாட துவங்கிவிட்டது. ஆக மக்களின் மனநிலை தினகரனுக்கு ஆதரவாக இருப்பது தெளிவாகிறது. இந்த நிலை தேர்தலன்றும் தொடருமா, ரிசல்ட் நிலை மாறுவதால் அதிகார மையங்களில் கரங்களால் தேர்தல் மீண்டும் தடுக்கப்படுமா, வேறு வகையிலான நிகழ்வுகள் அரங்கேறுமா என புரியவில்லை.