
பாஜகவின் பி டீம் திமுக என குற்றம்சாட்டி வருகிறார் நாம் தமிழர் கட்சி தாஇமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அதேவேளை சீமான் தான் பாஜகவின் பி டீம் என திமுக குற்றம்சாட்டி வருகிறது.
இதனை அடியோடு மறுக்கும் சீமான், ’ஆரியமும், திராவிடமும் வெவ்வேறு அல்ல. இருவரும் ஒருநாள் கட்டிப்பிடித்து கைகுலுக்கி சங்கமிப்பார்கள். என்று அன்றே
இவர்களை கணித்த ஐயா முத்துராமலிங்க தேவர்’’ ஆகையால் மோடியுடன் திமுக கூட்டணி அமைத்து இணைந்து செல்லும்’’ என சீமான் கூறி வருகிறார்.
இந்நிலையில் திமுக குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ‘’திருவொற்றியூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததற்கு யார் பொறுப்பேற்க உள்ளார்? அரசு வீடு கட்டி கொடுக்கிறது என்றால் தரமாக இருக்க வேண்டும். ஏன் இங்கு மட்டும் கேவலமாக இருக்கிறது? அதேபோல விளைந்து கடைக்கு வரும்போது நெல் தரமாக இருக்கிறது. அதுவே ரேசன் கடைக்கு வரும் போது ஏன் நாறுகிறது? இடையில் என்ன நடக்கிறது?
மக்களை பற்றி அரசு கவலைப்படவில்லை என்பதே காரணம். கட்டிட விபத்து ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற செயல். நாங்கள் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டால் அனுமதி மறுக்கப்படுகிறது. கொரோனா காலம் என்பதால் அதனை நாங்கள் புரிந்து கொள்கிறோம். நாகையில் நடந்த கூட்டத்தில் பேச மேடை அமைக்கக்கூட எங்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் உதயநிதி ஸ்டாலின் கோவையில் மாநாடு அளவுக்கு மக்களை திரட்டி பேசி உள்ளார். அதுவும் பொதுக்கூட்டம் தான். ஆனால் அதற்கு அனுமதி உள்ளது. அவர்கள் அதிகாரத்தில் இருப்பதால் அதிகாரத்தை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார்கள். ஆட்சியாளர்களின் அட்டகாசம் அது. ஆனால் உண்மையில் இந்த உரிமை எங்களுக்கும் உண்டு அல்லவா?
எதிர் கட்சியாக இருக்கும் போது ‘கோ பேக் மோடி’ என்றும், ஆளுங்கட்சியான பிறகு ‘வெல்கம் மோடி விருந்தாளி’ என்றும் சொல்கிறார் ஆர்எஸ் பாரதி. ஆட்சி அமைத்தப்பிறகு கூட்டாளி ஆகிறார்கள். மக்கள் ஏமாளியாக வேண்டியதுதான்.
எதிர் கட்சியாக இருக்கும் போது கருத்து சுதந்திரம் பேசுவது, ஆளுங்கட்சியான பிறகு கழுத்தை பிடித்து நெரிப்பது. இதே நிலை தான் தமிழகத்தில் காணப்படுகிறது. நீட் விவகாரத்தில் திமுக ஏமாற்றுகிறது. எதிர் கட்சியாக இருக்கும் போது திமுக போராடியது. ஆனால் இப்போது ஏகே ராஜன் குழு அறிக்கை கொடுத்ததற்கு பிறகும், எதுவும் நடக்கவில்லை. எல்லாம் ஏமாற்று வேலை தான்.
வரும் மாநகராட்சி தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிட உள்ளோம். ஆட்சிக்கு வருமுன் #GoBackModi என்றவர்கள் அதிகாரத்தில் அமர்ந்ததும், 'பிரதமர் மோடி வருகையை எதிர்க்கமாட்டோம்; அவர் எங்கள் பகையாளி அல்ல; விருந்தாளி' என்கிறார்கள். அம்மையார் மம்தாவுக்கும், ஐயா பினராயி விஜயனுக்கும் பகையாளியாக இருப்பவர், ஐயா ஸ்டாலினுக்கு மட்டும் விருந்தாளி ஆனதெப்படி?
பகையாளி என்பது விருந்தாளியானது போல, நாளைக்கு விருந்தாளி கூட்டாளியாகவும் மாறி, மக்களை ஏமாளியாக்கிக் கறுப்புக்கொடியைக் கீழே வீசிய கரங்கள், காவிக்கொடியைக் கையிலேந்தும் நாள் வெகுதொலைவில் இல்லை. இன்று திமுகவுக்கு பிஜேபி விருந்தாளி நாளை கூட்டாளி இதில் மக்கள் தான் ஏமாளி என அவர் தெரிவித்துள்ளார்.