
சந்தைக்கு போணும், ஆத்தா வைய்யும், காசு கொடு! எனும் ’16 வயதினிலே’ சப்பாணி கமலுக்கு எந்த வகையிலும் சளைத்ததாக இல்லை கோயமுத்தூர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளின் குரல்! - என்று ஏகபோக வசனம் கேட்கிறது அரசியலரங்கில். ’என்னாங்ணா ஒரேடியா இப்படி அசிங்கப்படுத்திப் போட்டீங்?’ என்று ஒருவேளை அவர்கள் மனம் குமுறுவார்களேயானால், இதை வேறு கலரில் சொல்லுவோமா?!....
கருணாநிதிக்கு பிடித்த துள்ளல் பாடல்களில் முன்வரிசையில் நிற்பது, காதலிக்க நேரமில்லை! படத்தில் வரும் ‘விஸ்வநாதன் வேலை வேணும்!’ பாடல். அமைச்சர் செந்தில்பாலாஜி முன் தரையிலமர்ந்து ‘மினிஸ்டரண்ணா லீவு வேணும்!’ என்று தர்ணா செய்யாத குறையாக குமுறிக் கொண்டிருக்கிறார்கள் கோயமுத்தூர் மாவட்ட ஆளுங்கட்சியினர்.
காரணம்?...சன் டே கூட லீவு விடாமல் நாள்தோறும் கட்சிப்பணி, காவாய் பணி என்று அவர்களை அமைச்சர் வெச்சு செய்வதால்தான். ‘பொழுது விடியுறதும் தெரியல, அடையுறதும் தெரியல. ஒரு மனுஷனுக்கு வாழ்க்கையில மீட்டிங் இருக்கலாம், ஆனா மீட்டிங்கே வாழ்க்கையா இருந்தா எப்படி?’ என்று வைகைப்புயல் ரேஞ்சுக்கு வெறுத்துப் போய் பேசுகின்றனர் நிர்வாகிகள்.
அதாவது கடந்த சட்டசபை தேர்தலில், பத்துக்கு பத்தும் தோற்றுப் போன கோயமுத்தூர் மாவட்ட தி.மு.க.வை சரிவிலிருந்து மீட்டெடுக்க அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் ராமச்சந்திரன் இருவரையும் ‘பொறுப்பு அமைச்சர்களாக’ நியமித்தார் முதல்வர் ஸ்டாலின். ஆனால் அவர்களின் செயல்பாட்டில் முதல்வருக்கு திருப்தியில்லை. அதனால் உதயநிதியை அனுப்பி ஒரு ரிப்போர்ட் ரெடி பண்ணித் தர சொன்னார். ரகசிய விசிட், ஓப்பன் விசிட், ஓரஞ்சாரமான விசிட் என்று பல ரூபங்களில் கோயமுத்தூர் மாவட்ட தி.மு.க.வுக்குள் வலம் வந்து, உதய் கொடுத்த ரிப்போர்ட்டை பார்த்து செம்ம காண்டாகிவிட்டார் ஸ்டாலின். காரணம் சட்டசபை தேர்தலில் எங்கே விழுந்து கிடந்ததோ அதே இடத்தில்தான் இவ்விரு அமைச்சர்கள் பொறுப்பேற்ற பிறகும் கிடந்தது கட்சி.
அதனால் அதிரடியாக, மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை கோவையின் பொறுப்பு அமைச்சராக்கிவிட்டு, பழைய மாண்புமிகுக்களை அதிலிருந்து விடுவித்தார். பொறுப்பை கையிலெடுத்த செந்தில் பாலாஜி, முதல்வர் தன் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றியே தீர வேண்டும், அதற்காக கோயமுத்தூர் மாவட்டத்தில் நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் ஒட்டுமொத்தமாக முழு வெற்றியை பெற்றே தீர வேண்டும்! எனும் முடிவில் தாறுமாறாக உழைக்கிறாராம். பொறுப்புக்கு வந்த ஒரே மாதத்தில் மாநகராட்சி, மற்றும் நகராட்சி பகுதிகளை குறி வைத்து நிகழ்ச்சிகளை நடத்தி, ஒன்றரை லட்சம் கோரிக்கை மனுக்களை மக்களிடம் பெற்றவர், அவற்றில் பெரும்பாலானவற்றை மாவட்ட நிர்வாகம் மூலம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். இது மக்கள் மத்தியில் அரசு மீது ஒரு நல்ல அபிப்ராயத்தை உருவாக்கிட ஓரளவு கைகொடுக்கிறதாம்.
ஆனால் அதேவேளையில் காலை ஆறு மணி, ஏழு மணிக்கெல்லாம் ஆலோசனை கூட்டம் நடத்துகிறாராம் நிர்வாகிகளை கூட்டி. அதேப்போல் சனி, ஞாயிறு என ஒன்று விடாமல் செயல்வீரர்கள் கூட்டம், ஊழியர் கூட்டம் என்று நடத்தி பெண்டை நிமித்துகிறாராம். இதெல்லாம் போதாதென்று சென்னையிலிருந்து உதயநிதியை வேறு அழைத்து வந்து மாவட்ட பூத் கமிட்டி கூட்டத்தையே ஏதோ மாநாடு ரேஞ்சுக்கு நடத்தியிருக்கிறார். இதில் உதய் குஷி, ஆனால் நிர்வாகிகளோ செம்ம காண்டு. காரணம், சன் டே கூட லீவு கொடுக்காமல் பணியில் பின்னி எடுப்பதால் தங்கள் பர்ஷனல் பணிகளைப் பார்க்க முடியலை, மனைவி குழந்தைகளுடன் நாலு எடத்துக்கு போயி நாளாச்சு! என்று பொங்குகிறார்களாம்.
உதயநிதியை வைத்து செந்தில்பாலாஜி அடுத்த இரண்டு மெகா நிகழ்வுகளுக்கு ஸ்கெட்ச் போட்டு இறங்க, நிர்வாகிகளோ ‘ஒன் டே வாச்சும் லீவு கொடுங்க அமைச்சரே’ என்று கதறுகிறார்களாம்.
பாவம் பாஸு! ஃப்ரீயா விடுங்க புள்ளிங்கள..!