
தெலங்கானா சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநரின் உரை இல்லாமல் நிலையில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அதிருப்தி அடைந்துள்ளார்.
தெலங்கானாவில் பாஜகவுக்கும் ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதிக்கும் (டி.ஆர்.எஸ்.) இடையே ஏழாம் பொருத்தமாக இருந்து வருகிறது. அடுத்த ஆண்டு இறுதியில் தெலங்கானாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடியையும் பாஜகவையும்வுடனும் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார் டிஆர்எஸ் தலைவரும் முதல்வருமான சந்திரசேகர ராவ். அண்மையில் ஹைதராபாத்தில் ராமானுஜரின் சிலை திறப்பு விழாவுக்கு பிரதமர் மோடி வந்தபோது அவரை வரவேற்காமல் புறக்கணித்தார் சந்திரசேகர ராவ். பிரதமர் மோடியுடன் மோதல் போக்கை சந்திரசேகர ராவ் தொடங்கியுள்ள நிலையில், அது தற்போது ஆளுநரைப் புறக்கணிக்கும் அளவுக்கு மாறியிருக்கிறது.
வழக்கமாக மாநில சட்டப்பேரவைகளில் ஆண்டு தொடக்கத்தில் ஆளுநரின் உரையுடன் கூட்டத் தொடர் தொடங்கும். தற்போது 5 மாதங்கள் கழித்து தெலங்கானாவில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. ஆனால், இது ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இல்லை என்றும் ஏற்கனவே நடந்த கூட்டத் தொடரின் தொடர்ச்சி என்பதால் ஆளுநரின் உரை தேவையில்லை என்று தெலங்கானா அரசு முடிவெடுத்து, அதை விளக்கமாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு தெரிவித்தது. ஆனால், தெலங்கானா அரசின் இந்த முடிவால் ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். அவருடைய அதிருப்தி அவருடைய கருத்து மூலம் வெளிப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ஐந்து மாத இடைவெளிக்கு பிறகு சட்டப்பேரவை மீண்டும் கூடினால் அதை புதிய கூட்டத்தொடராகத்தான் கருத வேண்டும். ஆளுநரின் உரை இன்றி ஆண்டின் பேரவை தொடர் தொடங்குவது மரபை மீறிய செயல். ஆளுநரின் உரை இடம் பெறாததால் முந்தைய ஆண்டில் அரசின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க கூடிய வாய்ப்பை பேரவை உறுப்பினர்கள் இழந்துவிட்டனர்” என்று தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். பிரதமரோடும் பாஜகவோடும் மோதல் போக்கை முதல்வர் சந்திரசேகர் ராவ் தொடரும் நிலையில், ஆளுநர் உரை இடம்பெறாமல் முதல்வர் செய்துவிட்டதாக தெலங்கானாவில் சர்ச்சை எழுந்திருக்கிறது.