
துரைமுருகனுக்கு உடல்நிலை பாதிப்பு
தமிழக அரசியலில் மூத்த தலைவராக இருப்பவர் துரைமுருகன், திமுக சார்பாக போட்டியின்னு காட்பாடி மற்றும் ராணிப்பேட்டை தொகுதியில் இருந்து 10 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். நீர்பாசனத்துறை அமைச்சராகவும் தற்போது பதவி வகித்து வருகிறார். கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த துரை முருகன் நேற்று நடைபெற்ற சட்ட மன்ற கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்தநிலையில் உடல்நிலை பாதிப்பு காரணமாக நேற்று இரவு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு லேசான காய்ச்சல் இருப்பதாக கூறப்பட்டது. அதற்காக சிகிச்சையை மருத்துவர்கள் அளித்து வந்தனர்.
உடல்நிலை விசாரித்த முதல்வர்
இந்தநிலையில் இன்று காலை சட்டபேரவை கூட்டத்திற்கு வருவதற்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் 4 வது தளத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைமுருகனை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். இதனை தொடர்ந்து மருத்துவர்களிடம் அமைச்சர் துரைமுருகனின் உடல் நிலை குறித்தும் கேட்டறிந்தார். இந்தநிலையில் அமைச்சர் துரைமுருகன் உடல்நிலை சீரானதையடுத்து இன்று மாலை வீடு திரும்ப உள்ளதாக துரைமுருகனின் உதவியாளர் தெரிவித்துள்ளார்.