ஆளுநர் மாற்றம் எங்கோ நெறி கட்டுகிறது.. திருடனுக்கு தேள் கொட்டியது போல அலறல்.. ஹெச்.ராஜா கிண்டல்..!

By Asianet TamilFirst Published Sep 11, 2021, 9:00 PM IST
Highlights

தமிழகத்தில் ஆளுநர் மாற்றத்தை திருடனுக்கு தேள் கொட்டியது போல் காங்கிரஸ் தலைவர் அழகிரி அலறுகிறார். ஆளுநர் மாற்றம் எங்கோ நெறி கட்டுகிறது என்று பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். 
 

காரைக்குடியில் உள்ள தனது இல்லத்தில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா 6 அடி விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியன்று பொது இடத்தில் விநாயகர் சிலைகளை வைத்து சமூதாய ஒற்றுமைக்காக எல்லா பகுதிகளிலும் வழிபாடு நடத்தி, ஊர்வலமாக எடுத்து சென்று நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். ஆனால், மத்திய அரசு வழிகாட்டுதலை  பின்பற்றுவதாக கூறி தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை விதித்துள்ளது.
பக்ரீத் பண்டிக்கைக்கு வீதிகளில் தொழுகை நடத்த அனுமதியளித்தனர். அது எந்த விதத்தில் நியாயம்? மத்திய அரசின் வழிகாட்டுதலை எல்லா மதத்துக்கும் பின்பற்றினால்தான் அது நேர்மையான அரசு. கரூரில் ஒரு போலீஸ் அதிகாரி விநாயகர் சிலையை உடைக்கிறார். தமிழகம் முழுக்க  விநாயகர் சிலை செய்யும் இடங்களில் எல்லாம்  பூட்டு போட்டுவிட்டார்கள். காவல் காக்கும் போலீஸ் விநாயகர் சிலையை திருடுவது அராஜாகத்தின் உச்சகட்டம். 
அந்த போலீஸார் மீது டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் தி.க.வா, விசிகவா, ,கம்யூனிஸ்டா எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தாக வேண்டும். இதுபோன்றவர்கள்  நாட்டுக்கு எதிராக செயல்பட மாட்டார்கள் என்று எப்படி உறுதியாக சொல்ல முடியும்? இந்துமத உணர்வுகளைக் காயப்படுத்தும் விதமாக பல போலீஸ் அதிகாரிகள் செயல்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. அவர்களை சஸ்பெண்ட்  செய்யாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்வோம். 
செப்டம்பர் 17-ஆம் தேதியை சமூக நீதி நாள் என்பதை ஏற்றுகொள்கிறோம். நாடு சுதந்திரமடைந்து 68 ஆண்டுகளாக பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்காதவர்கள்தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணியினர். ஒ.பி.சி க்கு இடஒதுக்கீடு, அகில இந்திய மருத்துவப் படிப்பில பிற்பட்டோருக்கு  27 சதவீத ஒதுக்கீடு வழங்கிய  பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் சமூகநீதி நாள் என்று ஏற்றுக்கொள்கிறோம்.
தமிழக ஆளுநராக  பன்வாரிலால் புரோஹித் சிறப்பாக செயல்பட்டார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி மற்றும் உளவுதுறையில் பணிபுரிந்தவராக புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை தமிழக முதல்வர் வாழ்த்து கூறி வரவேற்றுள்ளார். ஆனால், திருடனுக்கு தேள் கேட்டியது போல் ஆளுநர் மாற்றத்திற்கு  காங்கிரஸ் தலைவர் அழகிரி அலறுகிறார். இதுதான் ஏன் என்று  தெரியவில்லை. ஒரு வேலை இவர் ஏதேனும் கல்லூரியில் ஊழல் செய்திருப்பாரோ. ஆளுநர் மாற்றம் எங்கோ நெறி கட்டுகிறது” என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். 

click me!