
சென்னை மாநகராட்சி வார்டு எண் 56 இல் போட்டியிட்ட தேமுதிக பகுதி செயலாளர் சகாயராஜ் திடீரென தனது வேட்புமனுவை திரும்பப் பெற்று திமுகவில் இணைந்தார். தேமுதிகவின் நல்ல தலைமை இல்லாத காரணத்தால் திமுகவில் இணைந்து திமுக வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபட போவதாகவும் அவர் கூறியுள்ளார்.இது தேமுதிக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக-திமுகவுக்கு மாற்று தான்தான் என்ற முழக்கத்துடன் தேமுதி என்ற கட்சியை தொடங்கிய விஜயகாந்த், அதிரடியாக மக்கள் ஆதரவுடன் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்து வரை உயர்ந்தார்.பின்னர் அரசியலில் அவர் எடுத்த தவறான முடிவுகள், தேமுதிகவை வீழ்ச்சியை நோக்கி தள்ளியது. அதேநேரத்தில் விஜயகாந்துக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக என்ற கட்சி காலப்போக்கில் கலகலத்துப் போனது. அதிமுக பாஜக என மாறி மாறி கூட்டணி வைத்த நிலையில் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக தேமுதிகவின் கதை மாறிப்போனது. கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைக்க ஆள் இல்லாத நிலைமைக்கு தள்ளப்பட்டு கடைசியில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் சேர்ந்து தேர்தலை சந்தித்தது தேமுதிக.
வழக்கம் போல அதிலும் ஒரு இடத்தில் கூட அக்கட்சியால் வெற்றி பெறமுடியவில்லை. இந்நிலையில்தான் விஜயகாந்த் ஆக்டிவாக செயல்பட முடியாத நிலையில் கட்சியின் மொத்த நிர்வாகத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளார் பிரேமலதா விஜயகாந்த். தேமுதிகவில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை காரணமாக பலரும் அந்த கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர். ஆனாலும் கேப்டன் இதோ வந்துவிடுவார் அதோ வந்துவிடுவார்கள் என்றும், கட்சி எழுச்சி பெற போகிறது, மக்கள் தேமுதிக பின்னாள் திரளபோகிறார்கள் என அக்காட்சி தலைமை தொண்டர்களுக்கு அடிக்கடி நம்பிக்கையூட்டி வருகிறது, ஆனால் தொடர் தோல்வி, விஜயகாந்த் உடல்நிலை உள்ளிட்டவற்றை நன்கு புரிந்துவைத்துள்ள அக்கட்சித் தொண்டர்கள் கடும் மனச்சோர்வு அடைந்துள்ளனர். பலர் தற்போதைய தலைமை மீது நம்பிக்கை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அதற்கான வேலைகளில் அதிமுக- திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தேர்தலில் தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்து தமிழகம் முழுவதும் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் இன்று என்பதால், போட்டியில் இருந்து விலகும் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றனர். அந்த வகையில் வடசென்னை துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட சென்னை மாநகராட்சியின் வார்டு எண் 56ல் போட்டியிட இருந்தா தேமுதிக பகுதி செயலாளர் சகாயராஜ் என்பவர் அவரது வேட்பு மனுவை திடீரென திரும்பப் பெற்றார். பின்னர் மண்டல அலுவலகத்திலேயே திமுகவில் இணைந்தார்.
இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அமைச்சர் சேகர்பாபு இருக்கும் சூழ்நிலையில் வார்டு உறுப்பினர் பதவிக்கும் திமுக நபர் தேர்ந்தெடுக்கப்பட்டால் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இருக்கும் என்பதால், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் 56 வார்டில் போட்டியிட நான் அளித்த வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டேன். தேமுதிகவில் நல்ல தலைமை இல்லாத காரணத்தினால் திமுகவில் இணைந்து திமுக வேட்பாளருக்கு நானும் எங்கள் நிர்வாகிகளும் பரப்புரையில் ஈடுபட உள்ளோம். மேலும் நல்ல தலைமை அமைய வேண்டும் என்பதற்காகவே வேட்புமனுவை திரும்பப் பெற்றேன். இதில் யாருடைய வற்புறுத்தலும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.