
பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்ட விவகாரம் தமிழகமெங்கும் தாறுமாறாக எரிந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் ‘பெண்கள் ஸ்கூட்டர் வாங்க மானியம் தருகிறோம்.’ என்று அரசாங்கம் அறிவித்திருப்பதற்கு எதிராக கடும் காட்டமாக கிளம்பியிருக்கிறார்கள் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தினர்.
ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சம் பெண்களுக்கு ‘ஸ்கூட்டர் மானியம்’ திட்டத்தின் கீழ் நிதி வழங்கிட ஆண்டுக்கு 200 கோடி ரூபாயை ஒதுக்கிட முடிவு செய்திருக்கிறது தமிழக அரசு.
ஸ்கூட்டர் மானியம் பெற விரும்பும் பெண்களுக்கான தகுதிகள் என்னென்ன? அதை பெற எப்படி விண்ணப்பிப்பது? போன்ற தகவல்களை அந்தந்த மாவட்ட ஆட்சியரகம் சார்பில் மீடியாக்கள் மற்றும் பத்திரிக்கைகளின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த மானிய திட்டத்துக்கு எதிராக பொங்கி எழுந்திருக்கும் கம்யூனிஸ்டுகள் “ ஸ்கூட்டர் மானிய திட்டம் என்பது அரசு போக்குவரத்து துறையை அழிக்கும் செயல்தான். போக்குவரத்து துறையால் ஒரு நாளைக்கு குறைந்தது ரெண்டு கோடி பேர் பயன் பெறுகிறார்கள். ஆனால் வருடத்துக்கு ஒரு முறை ஒரு லட்சம் பேருக்கு ஸ்கூட்டர் மானியத்தை ஆசு வழங்கினால் போக்குவரத்து துறையின் வருவாய்தான் பாழாய்ப்போகும்.
பஸ்ஸில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கடும் வருவாய் இழப்பை நாளடைவில் போக்குவரத்துக் கழகம் சந்திக்கும். இப்படி ஸ்கூட்டருக்கு தரும் மானியத்தை போக்குவரத்து துறைக்கு கொடுத்தால் அந்த ரெண்டு கோடி மக்களும் பயனடைவார்களே.
ஆனால் இந்த நல்லெண்ணத்தை மதிக்காமல் ஓட்டு வங்கி அரசியலுக்காக ஸ்கூட்டர் மானியத்திலேயே குறியாக இருக்கிறது அரசு.” என்று பாய்ந்திருக்கிறார் சி.ஐ.டி.யு.வின் மாநில தலைவர் சவுந்தரராஜன்.