கொச்சியில் கடலில் மூழ்கியுள்ள நாகை மீனவர்களது விசைப்படகை மீட்டெடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
கொச்சியில் கடலில் மூழ்கியுள்ள நாகை மீனவர்களது விசைப்படகை மீட்டெடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு :-
கொச்சி அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நாகை மீனவர்களது விசைப்படகு விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கிய செய்தியறிந்து கவலையுற்றேன்.
கடந்த மாத இறுதியில் நடைபெற்ற இவ்விபத்தின்போது நடுக்கடலில் மூழ்கித் தத்தளித்த அவ்விசைப்படகைச் சேர்ந்த 11 மீனவர்களும் மீட்கப்பட்டது பெரும் ஆறுதலைத் தந்தாலும் ஒன்றிய, மாநில அரசுகள் விசைப்படகை மீட்டெடுக்க எவ்வித அக்கறையும் காட்டாதது ஏமாற்றத்தைத் தருகிறது. மீன்பிடித்தொழில் நலிவடைந்து, மீனவர்களது பொருளாதார இருப்பு கேள்விக்குறியாகி வரும் தற்காலச்சூழலில் ஒரு கோடி மதிப்பிலான விசைப்படகை இழப்பதென்பது அதனைச் சார்ந்திருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் பாதித்திட வழிசெய்யும் பேராபத்தாகும்.
ஆகவே, இவ்விவகாரத்தில் மாநிலத்தை ஆளும் திமுக அரசும், ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும் உரிய கவனமெடுத்து மூழ்கிய விசைப்படகினை மீட்டுத் தந்து, மீனவர்களது துயரத்தினைப் போக்கிட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். என அதில் கூறப்பட்டுள்ளது.