கர்நாடகாவை தொடர்ந்து ம.பி.,யிலும் அதிரடி ஆட்டம்... முதல் அடியிலே பாஜகவின் மூக்கை உடைத்த காங்கிரஸ்..!

By Thiraviaraj RMFirst Published Jul 25, 2019, 10:59 AM IST
Highlights

சட்டமன்றத்தில் காங்கிரஸ் கொண்டு வந்த மசோதாவுக்கு பாஜக எம்.எல்.ஏ-க்கள் இருவர் ஆதரவாக வாக்களித்து, அக்கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர். 
 

மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசு கவிழ்க்கப்பட்டதை போல மத்திய பிரதசேத்திலும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கப்படும் என்று அம்மாநில எதிர்க்கட்சியான பாஜக, எச்சரித்தது. ஆனால், சட்டமன்றத்தில் காங்கிரஸ் கொண்டு வந்த மசோதாவுக்கு பாஜக எம்.எல்.ஏ-க்கள் இருவர் ஆதரவாக வாக்களித்து, அக்கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

 

மத்திய பிரதேச சட்டசபையில் வழக்கறிஞர் பாதுகாப்பு மசோதா கொண்டு வரப்பட்டது. 15 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மசோதா குறித்து பேசப்பட்டது. ஆனால், பாஜக ஆட்சியில் அது சட்டமாக உருபெறவில்லை. அம்மாநில வழக்கறிஞர்கள், இந்தச் சட்டத்தை நிறைவேற்றுமாறு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். அதைத் தொடர்ந்துதான் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி, வழக்கறிஞர்கள் பாதுகாப்பு மசோதாவைக் கொண்டு வந்தது. அதற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் மட்டுமல்லாமல், ஷரத் கோல் மற்றும் நாராயண் திரிபாதி உள்ளிட்ட பாஜக எம்.எல்.ஏ-க்களும் ஆதரவாக வாக்களித்தனர். 

கர்நாடகத்தில் காங்கிரஸ் - மஜத ஆட்சி கவிழ்கப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய பிரதேச எதிர்க்கட்சித் தலைவரான பாஜக-வின் கோபால் பார்கவா, “எங்களது கட்சித் தலைமையிடம் இருந்து உத்தரவு வந்தால், உங்கள் ஆட்சி 24 மணி நேரம் கூட நீடிக்காது” என்று சவால் விட்டார். 


இதையடுத்து முதல்வர் கமல்நாத், “உங்கள் கட்சித் தலைமைக்கு மத்திய பிரதேச நிலைமை குறித்து தெரியும். அதனால்தான் எந்தவித உத்தரவையும் தராமல் உள்ளனர். எப்போது வேண்டுமானாலும் சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வரலாம்” என்று பதிலடி கொடுத்தார். இதைத் தொடர்ந்துதான் இரு பாஜக எம்.எல்.ஏ-க்கள் காங்கிரஸுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடகத்தில் ஆட்சி கவிழ்ப்பு நடந்ததற்கு காங்கிரஸ் தரப்பு, பாஜக-வை குற்றம் சாட்டி வருகிறது. பாஜக, குதிரை பேரத்தில் ஈடுபட்டு ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளிவிட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. 
 

click me!