இரண்டு வார்த்தைகளை வைத்து பாஜகவினர் திரிக்கிறார்கள்... தேர்தல் ஆணையத்தில் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்.!

By Asianet TamilFirst Published Apr 7, 2021, 8:45 PM IST
Highlights

என்னுடைய இரண்டு வார்த்தைகளை மட்டும் வைத்து என் மீது பாஜக குற்றம் சாட்டியுள்ளது என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் ஆணையத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
 

தேர்தல் பிரசாரத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி மரணம் குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சர்ச்சையாகப் பேசியதாக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்திருந்தது. அந்தப் புகாரில், “பாஜகவின் மறைந்த தலைவர்களான சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி ஆகியோர் பிரதமர் மோடி கொடுத்த நெருக்கடியால் இறந்தனர் என்று திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தவறான கருத்து மட்டுமல்ல, மக்களை திசை திருப்யும் அவதூறு.


தேர்தலுக்கு தொடர்பே இல்லாத அடிப்படையே இல்லாத, பொய்யான கருத்துகளைப் பேசி பிரதமரின் தனிப்பட்ட வாழ்க்கையையும் மறைந்த முன்னாள் அமைச்சர்களையும் விமர்சித்துள்ளார், இது தேர்தல் விதிமுறை மீறல். எனவே அவரைத் தேர்தலில் நிற்காதபடி தகுதி நீக்கம் செய்ய வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையம், இன்று மாலைக்குள் விளக்கம் அளிக்கும்படி உதயநிதிக்கு உத்தரவிட்டிருந்தது. 
இந்நிலையில் தேர்தல் ஆணையத்துக்கு உதயநிதி ஸ்டாலின் இன்று விளக்கம் அளித்தார். அதற்கான மனுவில், “தேர்தல் ஆணையத்தில் தன் மீது அளிக்கப்பட்ட புகாரை மறுக்கிறேன். நான் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். தன் மீதான புகார் குறித்த உரிய முழு தகவலை அளித்தால்தான் விளக்கம் அளிக்க சரியான வாய்ப்பு அளிக்கப்பட்டதாக இருக்கும். தேர்தல் ஆணையம் குறிப்பிட்டபடி தனிப்பட்ட நபர்களை விமர்சிக்கவோ அவதூறு கருத்துகளையோ நான் பேசவில்லை. என்னுடைய தமிழ்ப் பேச்சை ஆங்கிலத்தில் திரித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நான் யாரையும் தனிப்பட்ட முறையிலும் சொந்த வாழ்க்கையையும் விமர்சிக்கவில்லை. தாராபுரத்தில் என்ன பேசினேன் என்பதை ஏப்.2 அன்று சிங்காநல்லூர் கூட்டத்தில் விரிவாக விளக்கம் அளித்துள்ளேன். என்னுடைய இரண்டு வார்த்தைகளை மட்டும் வைத்து என் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மறைந்த சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவர்கள் ஆற்றிய பணியைப் பெரிதும் மதிக்கிறேன். எனக்கு வாய்ப்பளித்தால் முழு பேச்சின் சாராம்சத்தையும் அளிக்கத் தயார்” என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.

click me!