பி.எம்.கேர் நிதியில் மிகப் பெரிய மோசடி.. அந்தப் பணத்தை கஜானாவில் சேர்க்கணும்.. இது முத்தரசன் முழக்கம்.!

By Asianet TamilFirst Published Sep 29, 2021, 9:05 PM IST
Highlights

பி.எம். கேர் நிதியில் நடந்திருக்கும் மோசடி, தனிநபர் மோசடியை விடப் பெரிய மோசடியாகும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
 

தருமபுரியில் முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கொரோனா காலத்தில் தொழில்கள் பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் கடுமையாக வருவாய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். எனவே, குடும்பம் ஒன்றுக்கு மத்திய அரசு ரூ.7,500 வீதம் தர வேண்டும். அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஒவ்வொரு மாநில அரசும் தங்கள் மாநிலங்களில் உள்ள குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் வீதம் கொரோனா கால நிதியுதவி வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மாநில அரசுகள் நிதி நெருக்கடியில் தவிக்கின்றன. அப்படியிருக்க நிதியுதவி வழங்குமாறு அமித்ஷா கூறியிருப்பது கண்டனத்துக்குரியது.
தமிழகத்தில் திமுக அரசு ஏற்கனவே, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.4,000 நிதியுதவி அளித்துள்ளது. எனவே, மத்திய அரசு நிதி உதவி அளிக்க வேண்டும். தமிழக அரசின் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தின் மூலம் கிராமப்புற ஏழை, எளிய மக்கள் பயன் அடைவார்கள். இது வரவேற்புக்குரிய திட்டம். கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட செவிலியர்கள், பணியாளர்களை தகுதி அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இதுகுறித்துப் பரிசீலிக்கப்படும் என அரசு உறுதி அளித்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடத்தில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் அல்லது அரசுக்கு உரிய கட்டணம் செலுத்த வேண்டும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. இக்கட்டண விகிதம் முறைப்படுத்தப்பட வேண்டும்.
பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் விலையேற்றத்தை அரசு கட்டுப்படுத்த வேண்டும். பெட்ரோல் விலையில் தமிழக அரசு தனது பங்காக லிட்டருக்கு ரூ.3 விலையைக் குறைத்துள்ளது. அதுபோல, மத்திய அரசு வரியைக் குறைக்க வேண்டும். பி.எம். கேர் நிதியில் நடந்திருக்கும் மோசடி, தனிநபர் மோசடியை விடப் பெரிய மோசடியாகும். இந்த நிதி கணக்கில் வராதது, தணிக்கை வரம்பிலும் வராது எனக் கூறுகிறார்கள். இதுவரை அரசுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி வந்துள்ளது. இந்த நிதி தொடர்பாக வரவு, செலவுகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அந்த நிதி முழுவதையும் அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும்.
ஹெச்.ராஜா தொடர்ந்து தலைவர்கள், பத்திரிகையாளர்களைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். நாட்டின் நலன் கருதி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின் திட்டத்துக்கு மாநில அரசு ஸ்டிக்கர் ஒட்டுவதாக பாஜக கூறுவது அனைத்துமே பொய்” என்று முத்தரசன் தெரிவித்தார். 

click me!