சிறுபான்மையினருக்கு ஏற்றம் தரும் திமுக ஆட்சி தொடக்கம்.. கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஸ்டாலின் உறுதி.!

By Asianet TamilFirst Published Dec 20, 2021, 10:36 PM IST
Highlights

கிறிஸ்தவமும் அன்பைத்தான் போதித்துக் கொண்டிருக்கிறது. ஒருவர் மற்றவர்களுடன் அன்பாக இருங்கள் என்பதுதான் அனைத்து மதங்களின் சாராம்சம். அத்தகைய எண்ணங்களை நாமும் ஆதரிக்கிறோம். அதனை நாம் விமர்சிப்பது இல்லை.
 

சிறுபான்மையினருக்கு எல்லா வகையிலான ஏற்றமும் வழங்கும் காலமாக திமுக ஆட்சி காலம் தொடங்கி இருக்கிறது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் சென்னை சாந்தோமில் கிறிஸ்துமள் பெருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். “கிறித்துவ மக்களாக இருந்தாலும், சிறுபான்மை மக்களாக இருந்தாலும் அவர்களோடு எப்போதும் துணையாக நிற்பது திமுகதான் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். சிறுபான்மையினருக்கு இந்த அரசு எத்தகைய முக்கியத்துவம் தரும் அரசு என்பதன் அடையாளம்தான் கிறித்துவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவராக இருக்கக்கூடிய இனிகோ இருதயராஜை திமுக சார்பில் வேட்பாளராகப் போட்டியிட வைத்து சட்டப்பேரவைக்கு கழகத்தின் சார்பில் நாங்கள் அனுப்பி வைத்திருக்கிறோம். சிறுபான்மை, கிறித்துவ மக்களின் குரலைப் பிரதிபலிக்கும் பிரதிநிதியாக ஒருவர் சட்டப்பேரவையில் இடம்பெற வேண்டும் என்பதன் அடையாளமாகத்தான் இனிகோ இடம் பெற்றுள்ளார்.

முதலில் என் இதயத்தில் இடம்பெற்றார். இப்போது சட்டப்பேரவையில் இடம்பெற்றார். நாளைக்கு என்னவோ, அது தெரியாது எனக்கு. அதேபோல், இந்த ஆட்சி அமைந்ததும் சிறுபான்மையினர் ஆணையம் புதுப்பிக்கப்பட்டது. பீட்டர் அல்போன்ஸ் அந்த ஆணையத்தின் தலைவராக அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். சொல்லை வில்லாகப் பயன்படுத்தும் பேச்சாளர் அவர். எழுத்தை அதன் வலிமையோடு எழுதும் எழுத்தாளர். கொண்ட கொள்கையில் யாருக்கும் அஞ்சாமல் உறுதியாக இருக்கக்கூடியவர். இந்தப் பெருமைகளைப் பெற்றவர்தான் பீட்டர் அல்போன்ஸ். எப்படி நீங்கள் மனதார என்னை வாழ்த்தினீர்களோ அதுபோல நானும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அந்த வகையில் சிறுபான்மையினருக்கு எல்லா வகையிலான ஏற்றமும் வழங்கும் காலமாக திமுக ஆட்சி காலம் தொடங்கி இருக்கிறது. சிறுபான்மையின மக்களுக்கு என்றும் துணையாக திமுக அரசு இருக்கும்.

கிறிஸ்தவர்கள் என்றோ சிறுபான்மையினர் என்றோ - ஒரு வித அடையாளச் சொல்லாகத்தான் நாம் அதனை பயன்படுத்துகிறோம். நாம் மொழியால் தமிழர்கள்தான். இனத்தால் தமிழர்கள்தான். வழிபாடு என்பது அவரவர் விருப்பம். ஆனால் தமிழர்கள் என்பது பண்பாட்டுப் பிணைப்பு. எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன. கிறிஸ்தவமும் அன்பைத்தான் போதித்துக் கொண்டிருக்கிறது. ஒருவர் மற்றவர்களுடன் அன்பாக இருங்கள் என்பதுதான் அனைத்து மதங்களின் சாராம்சம். அத்தகைய எண்ணங்களை நாமும் ஆதரிக்கிறோம். அதனை நாம் விமர்சிப்பது இல்லை.

அன்பும், இரக்கமும், கருணையும் கொண்ட அரசைத்தான் திமுக அரசு நடத்திக் கொண்டிருக்கிறது. சிறுபான்மை இன மக்களுக்காகக் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் ஏராளம். சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக  திமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிட்டோம். 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளைக் கொடுத்தோம். அதில் 300க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். நிதிச் சுமை இருந்தாலும் மக்களுக்குச் செய்ய வேண்டிய நன்மைகளை, திட்டங்களை நிறுத்தாமல் செய்து வருகிறோம். நாங்கள் சொன்ன அனைத்து உறுதிமொழிகளையும் நிறைவேற்றிவிட்டோம் என்று சொல்லி என்னையும் ஏமாற்றி, உங்களையும் ஏமாற்ற நான் தயாராக இல்லை. ஆனால் நிறைவேற்றியே காட்டுவோம், அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

click me!