கிருஷ்ண சாமியை நோக்கி பாய்ந்த பார்வையாளர்கள்..?? தடுத்து நிறுத்திய திருமாவளவன்.. விவாத நிகழ்ச்சியில் பரபரப்பு.

By Ezhilarasan BabuFirst Published Apr 30, 2022, 1:00 PM IST
Highlights

தனியார் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த விவாத நிகழ்ச்சிகள் திமுகவுக்கு எதிராக பேசிய கிருஷ்ணசாமியை அங்கிருந்த  பார்வையாளர்கள் தாக்க முயற்சித்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களை தடுத்து சமாதானப்படுத்திய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

தனியார் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த விவாத நிகழ்ச்சிகள் திமுகவுக்கு எதிராக பேசிய கிருஷ்ணசாமியை அங்கிருந்த பார்வையாளர்கள் தாக்க முயற்சித்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களை தடுத்து சமாதானப்படுத்திய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. தலித் தலைவராக அறியப்பட்ட கிருஷ்ணசாமி பட்டியலின வெளியேற்றம் மற்றும் பாஜக அதரவு, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் எதிர்ப்பு என பேசி வரும்  நிலையிலும், திருமாவளவனின் இந்த அனுகுமுறையை பலரின் கவணத்தையும் ஈர்த்துள்ளது.

ஒவ்வொரு தொலைக்காட்சியும்  பார்வையாளர்களை தங்களை நோக்கி ஈர்க்கும் வண்ணம் பல நிகழ்ச்சிகளை தயாரித்து வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் செய்தி தொலைக்காட்சிகள் அன்றைய தினத்தில் அல்லது அந்த வாரத்தில் நடந்த முக்கிய அரசியல் பிரச்சினைகளை மையப்படுத்தி விவாதம்  நடத்தி வருகின்றன. அதில் அந்தப் பிரச்சினைக்கு, தலைப்புக்கு தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்கள் ஆளுமைகளை இடம்பெறச் செய்து விவாதிக்கின்றன. நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களும் தங்களது கருத்துக்களை ஆவேசமாகவும், மக்களுக்கு புரியும்படியாக தங்கள் பாணியில் சொல்வது வழக்கம்.

சில நேரங்களில் விவாதம் வாக்குவாதமாக மாறுவதும் உண்டு. அப்படியான ஒரு விவாத நிகழ்ச்சி தனியார் செய்தி தொலைக்காட்சியில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பொதுமக்களை பார்வையாளர்களாக திரட்டி, இரு தரப்பு சிறப்பு விருந்தினர்களை அழைத்து, அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதாவது தமிழகத்திற்கு தேவை திராவிட மாடலா- தேசிய மாடலா என்பதுதான் தலைப்பு. நிகழ்ச்சி சென்னை தி நகரில் உள்ள  ஜிஎன் செட்டி சாலையில் உள்ள  அரங்கில் நடத்தப்பட்டது. இதில் தமிழகத்துக்கு தேவை திராவிட மாடல் என்ற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ எழிலன் நாகநாதன், திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் உரையாற்றினர்.  தமிழகத்திற்கு தேவை தேசிய மாடல்தான் என்ற தலைப்பில் பாஜக இவை சார்ந்த பேராசிரியர் ராமசுப்பிரமணியன், பத்திரிக்கையாளர் கோலாகல சீனிவாசன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் பேசினர். விவாதம் அனல் பறக்க நடந்தது. அப்போது பேசிய புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி திமுகவை நோக்கி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

1968  நாகை மாவட்டம் கீழ்வெண் மணி கிராமத்தில் அரைப்படி நெல் கேட்டதற்காக 43 தொழிலாளர்கள் ஒரே குடிசையில் வைத்து எரிக்கப்பட்டபோது அப்போது ஆட்சியில் இருந்த திமுக அதற்காக என்ன செய்தது?  1978  விழுப்புரத்தில் 18 கூலித்தொழிலாளர்கள் கொல்லப்பட்டார்களே அப்போது திமுக என்ன செய்தது? 1995  ஆம் ஆண்டு கொடியன் குளத்தில் மிகப்பெரிய கலவரம் நடந்து நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டதே அப்போது திமுக என்ன செய்தது? அதையெல்லாம் மறைத்துவிட்டு இன்று நரிக்குறவர்கள் வீட்டிற்கு சென்று அவர்களை கட்டிப்பிடித்தால் எல்லாம் சரியாகிவிடுமா? என கேள்வி எழுப்பினார். அவரின் இந்த பேச்சு அங்கிருந்த திமுகவினரை கொதிப்படைய செய்தது. அங்கிருந்த பார்வையாளர்கள் கிருஷ்ணசாமியின் பேச்சை நிறுத்தும் படி எச்சரித்தனர். அவருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியபடி கிருஷ்ணசாமியை நோக்கி வந்தனர். அப்போது எதிர்ப்பக்கம் அமர்ந்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கிருஷ்ணசாமி அருகில் வந்து  நின்றதுதான்.

அங்கிருந்த  ஒலிபெருக்கியில், இது ஒரு விவாதம்,  கருத்தை கருத்தால்தான் எதிர்கொள்ள வேண்டும். இரு தரப்பில் உள்ள கருத்தை பரிமாறிக் கொள்வதற்காகத் தான் இந்த களம் அமைக்கப்பட்டுள்ளது. தோழர்கள் பார்வையாளர்கள் ஆவேசப் பட வேண்டாம், கருத்தை கருத்தால் எதிர்கொள்வோம் எனக் கூறியதுடன். கீழே இறங்கி கூட்டத்திற்கு மத்தியில்,  கிருஷ்ணசாமிக்கு எதிராக கொந்தளித்தவர்களை சமாதானப்படுத்தினார். விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனின் இந்த முயற்சியால் பார்வையாளர்கள் ஆவேசம் தணிந்தனர். அதன் பின்னரே கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. சரியான நேரத்தில் சரியாக செயல்பட்ட திருமாவளவனின் இந்த அனுகுமுறையை பலரும் பாராட்டி வருகின்றனர். 
 

click me!