இலங்கையில் நடக்கும் மே தின மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அழைப்பு விடுத்தனர். இந்நிலையில் அண்ணாமலை நேற்று இரவு இலங்கை சென்றார்.
இந்தியாவின் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அன்னிய செலவாணி பற்றாக்குறையால் இலங்கை, கச்சா எண்ணெய் உள்பட பல முக்கிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால், இலங்கை வரலாறு காணாத நெருக்கடியை சந்தித்து வருகிறது. விலை வாசி விண்ணை முட்டும் அளவுக்கு உள்ளதால், பொது மக்கள் கடும் துயரம் அடைந்துள்ளனர். இலங்கையின் தற்போதைய சூழலும் ஆளும் ராஜபக்சே குடும்பத்தினரே காரணம் எனக் கூறும் இலங்கை மக்கள் தலைநகர் கொழும்பு உள்பட பல இடங்களில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, இலங்கையில் அனைத்துக்கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசு அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல்வேறு நெருக்கடிகளால் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, கடன் உதவிகளை செய்து வருகிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவிட ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக்கோரி சட்டசபையில் தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்களுக்கு உதவிட அனுமதி கோரும் அரசினர் தீர்மானம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
undefined
சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கலாம் எனத் தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. ரூ. 80 கோடி செலவில் 40 ஆயிரம் டன் அரிசி, 28 கோடி ரூபாய் மதிப்பில் உயிர் காக்கக்கூடிய 137 மருந்துப் பொருட்கள் , ரூ. 15 கோடி ரூபாய் செலவில் குழந்தைகளுக்கு வழங்க 500 டன் பால்பவுடர் என இலங்கையில் வாழக்கூடிய அனைத்து மக்களுக்கும் வழங்க உள்ளோம் என்றார்.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த தனி தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இலங்கை மக்களுக்கு தனிப்பட்ட முறையில் தனது குடும்பத்தின் சார்பாக ரூபாய் 50 லட்சம் தர தயார் என ஓபிஎஸ் அறிவித்தார். மனிதநேயத்திற்கு அடையாளமாக தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதை இத்தீர்மானம் விளக்குகிறது என்றும் அவர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். ஓபிஎஸின் இந்த அறிவிப்புக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி கூறினார்.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை, நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக, இலங்கைக்கு சென்றுள்ளார். தலைநகர் கொழும்புவுக்கு செல்லும் அவர், பல்வேறு இடங்களுக்குச் செல்ல திட்டமிட்டு உள்ளார். குறிப்பாக, இலங்கைத் தமிழர்கள் வசிக்கும் இடங்களுக்குச் சென்று, அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து கேட்டறிய உள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை, பிரதான கட்சிகளான அதிமுக - திமுக, இலங்கைத் தமிழர்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளதாக காட்டி வருகின்றன.
இவர்கள் வரிசையில், பாஜகவையும் சேர்க்கும் முயற்சியில், அண்ணாமலை ஈடுபட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், சிங்களர்களையும் அண்ணாமலை சந்தித்து பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது. இலங்கைத் தமிழர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக, திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் தெரிவித்து வரும் நிலையில், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை, நேரடியாக அங்கு களத்திற்கு செல்ல உள்ளது, அக்கட்சிக்கு நல்ல அடித்தளத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இலங்கைக்கு கிளம்பும் போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, 'இலங்கைக்கு இந்தியா ஏகப்பட்ட உதவிகளை செய்து வருகிறது. பிரதமர் மோடியின் நேரடி கண்காணிப்பில் இந்த உதவிகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே, இலங்கை மக்களுக்கு தேவையான பல உதவிகளை பிரதமர் மோடி செய்துள்ளார். அங்கிருக்கும் மக்களின் மீள் வாழ்க்கைக்காக, 10 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடு வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.
இதற்கு நன்றி சொல்லும் விதமாக, அங்கிருக்கும் இந்திய வம்சாவளி மக்கள், தங்களின் தொழிலாளர் காங்கிரஸ் வாயிலாக, மே 1ல் நடத்தப்படும் மே தின விழாவுக்கு வரும்படி, மோடியின் பிரதிநிதியாக என்னை அழைத்துள்ளனர். நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றவும் பணித்துள்ளனர். அதை ஏற்று, இலங்கை செல்லும் நான், பொருளாதார சிக்கலை மேம்படுத்துவதற்காக, இலங்கை அரசு எடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் இந்திய அரசு தொடர்ந்து செய்ய வேண்டிய உதவிகள் குறித்து, அந்நாட்டு தலைவர்கள் எதிர்பார்ப்பை அறிந்து கொள்ள இருக்கிறேன். பிரதமர் மோடியின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், பயனடைந்துள்ள பயனாளிகளையும் சந்திக்க இருக்கிறேன்' என்று கூறினார்.
இதையும் படிங்க : இனி சனிக்கிழமை விடுமுறை கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு ஆப்பு வைத்த தமிழக அரசு!