அரசப் பயங்கரவாதத்தின் பேரவலம்... ஜெய்பீம் படத்தை கவிதை வடிவில் பாராட்டிய திருமாவளவன்.!

By Asianet TamilFirst Published Nov 3, 2021, 8:38 AM IST
Highlights

கடலூர் மாவட்டத்தில் 28 ஆண்டுகளுக்கு முன்பு போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட ராஜகண்ணு, நீதிக்காகப் போராடிய அவருடைய மனைவி, அதற்காக வழக்கறிஞராகப் பாடுபட்ட கே.சந்துரு ஆகியோரை மையப்படுத்திதான் இக்கதை படமாக்கப்பட்டிருக்கிறது.

‘ஜெய்பீம்’ படம் அரசப் பயங்கரவாதத்தின் பேரவலம் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பாராட்டியுள்ளார்.

தீபாவளி திருநாளையொட்டி சூர்யா நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில் ‘ஜெய்பீம்’ படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் உட்பட மேலும் பலர் நடித்துள்ளார்கள். கடலூர் மாவட்டத்தில் 28 ஆண்டுகளுக்கு முன்பு போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட ராஜகண்ணு, நீதிக்காகப் போராடிய அவருடைய மனைவி, அதற்காக வழக்கறிஞராகப் பாடுபட்ட கே.சந்துரு ஆகியோரை மையப்படுத்திதான் இக்கதை படமாக்கப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட பழங்குடியின பெண்ணின் பிரச்சினைக்காக போராடும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் சூர்யா இப்படத்தில் நடித்துள்ளார்.

ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மனம் திறந்து பாராட்டியிருந்தார். இதேபோல கமல்ஹாசன், ப.ரஞ்சித் உள்ளிட்ட கலைஞர்களும் இப்படத்தைப் பார்த்து பாராட்டியிருந்தார்கள். சமூக ஊடகங்களிலும் இப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ‘ஜெய்பீம்’ திரைப்படத்தை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பார்த்தார். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தன்னுடைய சமூக ஊடகப் பக்கங்களில் கவிதை வடிவில் திருமாவளவன் படத்தைப் பற்றி பதிவிட்டுள்ளார்.  

இது அரசப் பயங்கரவாதப் பேரவலம்!

சட்டம் - அது 
வலியவனைக் கண்டால் 
வளைந்து கொடுக்கும்!
எளியவனைக் கண்டால் 
எட்டி உதைக்கும்!
இது சிறுத்தைகளின்
அரசியல் முழக்கம்!
காலம் காலமாய் வஞ்சிக்கப்படும்
வதைக்கப்படும் 
பழங்குடி மக்களின் 
பாழும் வாழ்வைப் 
பாடமாய் விவரிக்கும் 
படமே #ஜெய்பீம்! 
இது அரசப் பயங்கரவாதப் பேரவலம்!
இவ்வாறு திருமாவளவன் பாராட்டியுள்ளார். 

click me!