பிரசாந்த் கிஷோரால் அழுத்தம்... மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் மைண்டிடம் அடகுவைக்கப்படும் அதிமுக..?

By Thiraviaraj RMFirst Published Feb 20, 2020, 1:02 PM IST
Highlights

அதிமுகவின் பலமே அக்கட்சித் தொண்டர்கள்தான். ஆனால், அதனை உணராமல் திமுகவை பார்த்து  சூடுபோட்டுக் கொண்டு வழியச் சென்று தலையைக் கொடுத்து அதிமுக சிக்கிக் கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

அதிமுகவின் பலமே அக்கட்சித் தொண்டர்கள்தான். ஆனால், அதனை உணராமல் திமுகவை பார்த்து  சூடுபோட்டுக் கொண்டு வழியச் சென்று தலையைக் கொடுத்து அதிமுக சிக்கிக் கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

திமுக வடக்கிலிருந்து பிரசாந்த் கிஷோரை பிரச்சார வியூகத்திற்கு அழைத்து வந்திருக்கிறது. அதனை விமர்சித்து வரும் அதிமுக, திமுகவை போலவே தங்களுக்கும் பிரச்சார வியூகம் அமைக்க ஆள்தேடுவதாக கூறப்படுவது முரண்பாடாக உள்ளது. அதுவும் மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் மைண்டாக இருந்து ஓ.எம்.ஜி நிறுவனத்தை நடத்தி திமுகவுக்கு வலது கரமாக இருந்த சுனிலை தங்களுக்கு பிரச்சார வியூகம் அமைக்க அழைக்கலாமா? என்கிற நிலைப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. 

யார் இந்த சுனில்..? ஸ்டாலினுக்கு மட்டுமல்ல சில மாதங்களுக்கு முன்பு வரை தி.மு.க- வுக்கும் மாஸ்டர் மைண்ட் இவர். சபரீசன் மூலம் ஸ்டாலினுக்கு அறிமுகமான தொழில்நுட்ப வல்லுநர். ஸ்டாலினை வழி நடத்திய ஓ.எம்.ஜி குழு இவர் தலைமையில்தான் செயல்பட்டு வந்தது. ஸ்டாலினின் ‘நமக்கு நாமே’ திட்டம், ஊராட்சி சபைக் கூட்டம் வரை ஓ.எம்.ஜி குழுமத்தின்  சிந்தனையில் உதித்த திட்டங்கள்தாம். ஸ்டாலினின் ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் சுனிலின் ஆலோசனை கண்டிப்பாக இருக்கும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மூலமாக ஓ.எம்.ஜி சுனில் கடந்த இரண்டு தேர்தல்களில் திமுகவின் கொள்கைகளை, ஸ்டாலினின் பயணங்களை, பிரச்சாரங்களை ஒருங்கிணைத்து வந்தவர். தற்போது பிரஷாந்த் கிஷோர் உள்ளே வந்ததால் சுனில் திமுகவை விட்டு விலகி இருக்கிறார். 

ஆனாலும், ஓ.எம்.ஜி நிர்வாகி சுனிலும், ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் நகமும், சதையும் போல நட்புள்ளவர்கள். எங்கே இருந்தாலும் அவர்களது நட்பில் விரிசலே விழாது. அதுமட்டுமல்ல 2014ம் ஆண்டு  பாஜகவுக்காக தேர்தல் வியூகம் அமைக்க புதிதாக சி.ஏ.ஜி. கார்ப்பரேட் நிறுவனம் தொடங்கப்பட்டது. அப்போது அந்த நிறுவனத்தின் இயக்குநராக இருந்தவர் பிரசாந்த் கிஷோர். அதே நிறுவனத்தின் இணை இயக்குநராக இதே தி.மு.கவுக்குப் பணியாற்றிய ஓ.எம்.ஜி குழுவின் தலைவர் சுனில்.  அந்த வகையில் சுனிலுக்கும், பிரஷாந்த் கிஷோருக்கும் இப்போதும் படுநெருக்கம்.

நிலைமை இப்படி இருக்க, அவரை கூட்டி வந்து தேர்தல் பணியாற்ற நினைக்கிறது அதிமுக என்கிறார்கள் அக்கட்சி முக்கிய நிர்வாகிகள் சிலர் தலையிலடித்துக் கொள்கிறார்கள். டெல்லியில் அதிகாரப்பீடத்திற்கு நெருக்கமாக இருப்பவர் கோவை முரளி. அதிமுக அமைச்சர்களான தங்கமணி, வேலுமணிக்கு டெல்லியில் சில லாபிகள் செய்து பாஜக வட்டாரத்தில் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்தவர். 

தமிழகத்தில் நடக்கும் வருமானவரி சோதனை எல்லாம் தான் சொல்லியே நடக்கிறது,அடுத்த ரெய்டு லாட்டரி மார்ட்டினுக்கு என அவ்வப்போது அதிரச்சி கொடுப்பவர். அவர் மூலம் சுனிலை அதிமுகவுக்கு பிரச்சாரம் வகுக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. சுனிலை அதிமுகவுக்கு அழைத்து வரும் பட்சத்தில் சில கணக்குகளை போட்டு கோவை முரளி காய் நகர்த்துவதாகக் கூறப்படுகிறது.

மு.க.ஸ்டாலின் மருமகன், சபரீசனுடன் நகமும், சதையுமாக இருந்தவர். பிரஷாந்த் கிஷோருடன் உடனிருந்து பணியாற்றியவர். அதைவிட முக்கியமான ஒன்று கார்பரேட் நிறுவனங்கள் காசுக்காக பணியாற்றுபவை. எப்படி வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வளைந்து கொடுக்கும். இவற்றை எல்லாம் உணராமலா இருப்பார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி? 

இதுகுறித்து அதிமுக நிர்வாகி ஒருவர், ‘’சுனிலை அதிமுகவுக்காக பணியாற்ற வைக்க சிலர் நிர்பந்திப்பதால் அமைச்சர்கள் சிலர் ஆலோசனை கூறி வருகின்றனர். அப்படி அவரை அழைத்து வந்தால் வெளியே போகிற ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்டகதையாகி விடும். இதை எடப்பாடி பழனிசாமி உணர்ந்தே வைத்திருக்கிறார். பிரஷாந்த் கிஷோரை திமுக அழைத்து வந்தபோது வடமாநிலங்களை போலல்லாமல் தமிழகத்தில் கடும் விமர்சனம் எழுந்தது. அப்படி இருக்கையில் திமுகவின் மாஸ்டர் மைண்டாக சில மாதங்களுக்கு முன்பு வரை இருந்த சுனிலை அழைத்து வந்தால் அதிமுக விசுவாசிகளே அந்த செயலை ஒரு சதவிகிதம்கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதுமட்டுமல்ல. அவருடன் ஒருவித நெருடலுடனே பணியாற்ற வேண்டியது வரும். அதை தவிர்த்து முழுமூச்சில் களமிறங்கி கூடுதலாக உழைத்தால் அதிமுக வெற்றியை ருசிக்கும்.

வடமாநிலங்களில் பிரசாந்த் கிஷோரின் செயல்பாடுகள் எப்படியோ தெரியாது. ஆனால் அவரது சூத்திரம் தமிழகத்தில் எடுபடுவது கடினம். இரண்டு முக்கியக் காரணங்கள் அதற்குப் பின்னால் இருக்கின்றன. இந்தியாவில் எந்த மாநிலத்தையும் முன்வைத்து தமிழகத்தின் தேர்தல் களத்தை ஒப்பிட முடியாது. மோடிக்கு ஆதரவான அலை நாடு முழுவதும் வீசியபோது இங்கு பாஜக மண்ணைக் கவ்வியது. அதே போல் வட இந்திய அரசியல் களத்துக்கும் தமிழக அரசியல் களத்துக்கும் நிறைய வேறுபாடு உள்ளன.  

ஜாதிகளை முன்வைத்து தேர்தல் வியூகம் வகுக்கும் கிஷோார், தமிழகத் தேர்தல் களத்தைக் கணிப்பதும் கடினம். தமிழகத் தேர்தல் களத்தை நன்கு அறிந்த பல சூரர்கள் அதிமுகவில் இருக்கிறார்கள். அவர்களை முறையாகப் பயன்படுத்தினாலே அ.தி.மு.க தலைமைக்குப் போதுமானது. எத்தனையோ சோதனைகள் வந்தாலும் எவ்வளவு லாவகமாக கையாண்டு இந்த ஆட்சியை ஐந்தாண்டுகள் முழுமையாக ஆண்டிருக்கிறோம். அதனால் தான் எங்கே மீண்டும் ஆட்சிக்கு வராமல் போய்விடுமோமோ என்கிற பதவி தாகத்தில், கார்ப்பரேட் மோகம் தி.மு.கவை ஆட்டிப்படைக்கிறது.

பிரசாந்த் கிஷோரை திமுக அழைத்து வந்ததால் அதற்கு மாற்றாக அவர்களிடம் இருந்தவரையே அழைத்து வருவது மூடத்தனம். வெற்றி பெற்றால் அதற்கு தானே காரணம் என்பதை வெளியே மார்க்கெட் செய்யும் கிஷோர், தோல்வியடைந்தால் சத்திமில்லாமல் அமுங்கிவிடுவார். இதுதான் அவரது நிலைப்பாடு. அப்படிப்பட்டவரை பார்த்து அதிமுக பயப்படத்தேவையில்லை’’என்கிறார் அவர். 
 

click me!