நடிகர் விஜய்க்கு ஆதரவாக பேசி வம்பை இப்படியா விலை கொடுத்து வாங்குறது.. மீண்டும் நெல்லை கண்ணனுக்கு சிக்கல்?

By Asianet TamilFirst Published Aug 18, 2021, 8:37 AM IST
Highlights

நடிகர் விஜய் வழக்கில் தீர்ப்புச் சொன்ன நீதிபதியை தரக்குறைவாக பேசிய நெல்லை கண்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க பாஜக அனுமதி கேட்டிருக்கிறது.
 

இதுதொடர்பாக பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அஸ்வத்தாமன், தமிழக அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரத்துக்கு மனு அனுப்பியுள்ளார்.  அதைப் பதிவும் செய்ய கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு குறித்து அஸ்வத்தாமன் கூறுகையில், “நெல்லை கண்ணன் சிரிக்கசிரிக்க பேசக் கூடியவர். கூட்டத்தில் இருப்பவர்களைச் சிரிக்க வைக்க யாரை பற்றியும் பேசுவார். அது கேலியாகவும் கிண்டலுமாகவும் இருக்கும். அதுமட்டுமல்ல,  கேவலமாகவும் பேசுவார். இது அவருடைய வாடிக்கை.
சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடியைப் பற்றி பேசும்போது, “அவரின் சோலியை முடிக்க வேண்டும்”' என்றார். திருநெல்வேலி பாஷையில், 'சோலி முடிப்பது' என்றால், தீர்த்து கட்டுவது என்று அர்த்தம். இதுதொடர்பாக அவர் மீது போலீசில் புகார் கொடுத்தேன். அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்தபிறகு சிறிது காலம் அமைதியாக இருந்தார். இப்போது மீண்டும் பொதுக்கூட்ட மேடைகளில் பேச துவங்கியுள்ளார்.
பாளையங்கோட்டையில் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவின் நுாற்றாண்டு விழா கூட்டத்தில் பேசினார். அப்போது நடிகர் விஜய் வெளிநாட்டு காருக்கு நுழைவு வரி செலுத்தாது தொடர்பான வழக்கு பற்றி விமர்சனம் செய்து பேசினார். அப்படி பேசும்போது, “இந்த சுப்பிரமணியன்னு ஒரு ஜட்ஜ் இருக்கான் பார்த்தீங்களா. மெனக்கெட்டு வந்து, விஜய் பயல அசிங்கப்படுத்தி இருக்கானே அவன். ஜோசப் விஜய்னு சொல்லியிருக்கான். அவன் என்னய்யா தப்பு பண்ணிட்டான்? நீ ரியல் ஹீரோவா இருங்கற; நீ ரியல் ஜட்ஜா இருக்குறயா? மூடுல நீ...”


இப்படி பேசியது முழுக்க முழுக்க நீதிமன்ற அவமதிப்பாகும். நடிகர் விஜய்க்கு ஆதரவாக நெல்லை கண்ணன் என்ன வேண்டுமானாலும் பேசலாம். அதற்காக ஒரு நீதிபதியை, அவன், இவன் என எந்த நாகரிகமும் இல்லாமல் பொதுவெளியில் பேசுவதை வழக்கறிஞர் சமூகம் எப்படி அனுமதிக்க முடியும்? அந்த வழக்கில் தன் பெயர் விஜய் என்பதைக் குறிப்பிடவில்லை.  மனுவிலேயே ஜோசப் விஜய் என்றுதான் குறிப்பிட்டிருந்தார். இதை குறிப்பிட்டுதான், தீர்ப்பு எழுதி இருக்கிறார் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம். தீர்ப்பை விமர்சிப்பதில் தவறில்லை. ஆனால், நீதிமன்றத்தின் செயல்பாடு மற்றும் நீதிபதியின் செயல்பாட்டுக்கு உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது. அது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். அதனால், நெல்லை கண்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க தமிழக அட்வகேட் ஜெனரலிடம் மனு கொடுத்துள்ளேன். அது பதிவு செய்யப்பட்டிருக்கிறது.” என்று அஸ்வத்தாமன் தெரிவித்துள்ளார். 
 

click me!