திமுகவுக்கு மேலும் கூடப்போகுது மாநிலங்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை.. திமுகவை குஷிப்படுத்திய அறிவிப்பு.!

By Asianet TamilFirst Published Aug 17, 2021, 10:09 PM IST
Highlights

தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
 

தமிழகத்திலிருந்து அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஏ. முகமதுஜான். கடந்த மார்ச் மாதம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அவர் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இதனையடுத்து அந்த இடம் காலியானது. காலியான இடத்துக்கு 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி. கொரோனா பரவல் காரணமாக இடைத்தேர்தல் நடத்துவதை தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்திருந்தது.
இந்நிலையில் முகமதுஜானால் காலியான இடத்தை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தல், செப்டம்பர் 13-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தலுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் 24-ஆம் தேதி வெளியிடப்படும். வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31-ஆம் தேதி ஆகும். செப்டம்பர் 1-ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 3 ஆகும்.
ஓரிடத்துக்கு மட்டும் இந்தத் தேர்தல் நடைபெறுவதால், இந்த இடத்தை திமுக கைப்பற்றுவது உறுதி. அவையில் 133 உறுப்பினர்களைக் கொண்ட திமுக, போட்டியின்றி தேர்தலில் வெற்றி பெற்றுவிடும். இந்தத் தேர்தலில் வெற்றி பெறுபவர் 2025-ஆம் ஆண்டு வரை பதவியில் இருப்பார். மேலும் எம்.எல்.ஏ. தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி. பதவியை கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோர் ராஜினாமா செய்தனர். ஆனால், இந்தக் காலி இடங்களுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. 
 

click me!