
அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை கட்சியை விட்டு விலக சொல்லிய ஜெயக்குமார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சசிகலா மற்றும் தினகரனால் மட்டுமே கட்சியை வழி நடத்த முடியும் எனவும் எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை விவகாரத்தில் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சிறைக்கு சென்று நேற்று முன்தினம் வெளியே வந்தார்.
அப்போது கட்சி பணிகளில் மீண்டும் பணியாற்றுவேன் என தெரிவித்தார். ஆனால் அதற்கு எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை எதிர்ப்பு தெரிவித்தது.
ஏற்கனவே டிடிவி அறிவித்தபடி கட்சியை விட்டு ஒதுங்கி இருக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார்.
பின்னர், சசிகலாவை சிறையில் சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி அதிமுகவில் இருந்து என்னை விலக்க யாருக்கும் உரிமை இல்லை எனவும் இன்னும் 6 மாத காலம் பொறுத்திருந்து பார்த்துவிட்டு என் பணிகளை தொடர்வேன் எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து, இன்று திடீரென அதிமுகவை சேர்ந்த 29 எம்.எல்.ஏக்கள் தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதனால் கலக்கமடைந்த எடப்பாடி 9 மாவட்ட எம்.எல்.ஏக்களுடன் ஆல்சோனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், தினகரனின் ஆதரவாளர்களை சந்தித்த பின்னர், எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை கட்சியை விட்டு விலக சொல்லிய ஜெயக்குமார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
சசிகலா மற்றும் தினகரனால் மட்டுமே கட்சியை வழி நடத்த முடியும்.
அதிமுக ஒரே அணியாகத்தான் உள்ளது. பிளவு எதுவும் இல்லை. துணைப்பொதுச்செயலாளர் என்ற முறையில் தினகரனை சந்தித்தோம்.
கட்சி தொடர்பான நடவடிக்கையை சசிகலா, தினகரனால் மட்டுமே எடுக்க முடியும்.
ஒ.பி.எஸ் போல் கட்சி மற்றும் ஆட்சியை கவிழ்க்க முயல மாட்டோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.