
மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், வலுவாக இருந்த கட்சிகள் அனைத்தும், வழக்கு, மோசடி, உள்கட்சி பூசல் என்ற ஏதாவது ஒரு வகையில் பிரிவினையை சந்தித்து வருகின்றன.
ஹரியானாவில் ஓம் பிரகாஷ் சவுதாலா தொடங்கி, பீகாரில் லாலு, உத்திரபிரதேசத்தில் முலாயம் சிங் என மாநில அளவில் வலுவாக இருக்கும் பல கட்சிகள் சந்திக்கும் கடுமையான சிக்கல்களே அதற்கு சான்றாகும்.
குறிப்பாக, தமிழகத்தில் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை நெருங்க முடியாத டெல்லி, அவர் மறைவுக்கு பின்னர் தமது வேலையை காட்ட தொடங்கியது.
ஊழல், மோசடி, சோதனை என ஆளும் தரப்பில் உள்ள இரண்டாம் நிலை தலைவர்களுக்கு, நெருக்கடியும், நெருக்கடி மூலம் அச்சமும் கொடுத்து, அதிமுகவை இரண்டு அணிகளாக சிதைத்தது.
அடுத்து, ஆளும் எடப்பாடி தரப்பிற்கு டெல்லியின் ஆதரவு இருப்பதால்,தற்போது தினகரன் மூலம், மேலும் ஒரு நெருக்கடி உருவாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பன்னீர் அணி, எடப்பாடி அணி என இரண்டாக இருந்த அதிமுக, தற்போது தினகரன் அணி என மூன்றாக சிதைந்து வருகிறது.
எடப்பாடி பழனிசாமி, சசிகலாவால் முன்மொழியப்பட்ட முதல்வர்தான் என்றாலும், அவர் மோடியின் தீவிர ஆதரவாளர் ஆகிவிட்டதால், தற்போது தினகரன் அவருக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்.
நேற்றுவரை 10 எம்.எல்.ஏ க்களின் ஆதரவை பெற்றிருந்த தினகரனுக்கு, இன்று அந்த ஆதரவு 29 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகாரிக்கும் என்று, அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவை பெற்று, இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக நாடாளுமன்றத்தில் வீற்றிருக்கும் அதிமுக, ஜெயலலிதா என்ற ஒரு ஆளுமையின் மறைவால், இன்று மூன்றாக சிதறி கிடக்கிறது.
அதிமுகவின் சிதைவை அரங்கேற்றி வருபவர்களுக்கு, அதன் தலைவர்களே துணை போவதுதான் பரிதாபத்திற்குரியதாக உள்ளது.
இந்த நிலையில், அதிமுக ஆட்சியை கவிழ்க்க எதிர் கட்சிகளே தேவை இல்லை. எங்களுக்கு நாங்களே எமன் என்று, ஆளுக்கொரு பாசக்கயிறை கையில் வைத்துக் கொண்டு அலைந்து கொண்டிருக்கின்றனர் அதிமுகவின் முக்கிய தலைவர்கள்.
அதனால், சட்டமன்ற கூட்டம் தொடங்கும் வரை அதிமுக ஆட்சி நிலைக்குமா? என்ற திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் கேள்வியில் அர்த்தம் இல்லாமல் இல்லை.