
பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திக்க தினகரனுடன் 10 எம்எல்ஏக்கள் சென்ற நிலையில், தினகரனுக்கு இன்று காலையிலிருந்து 29 எம்எல்ஏக்களின் ஆதரவு பெருகிவருகிறது. இதே சூழ்நிலையில் எடப்பாடி அனைத்து எம்எல்ஏக்களையும் சந்திக்க உள்ளதால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு நிலவியுள்ளது.
இலையை மீட்டெடுக்க லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில் திஹாருக்கு சென்று நிபந்தனை ஜாமீனில் திரும்பிய தினகரன், நேற்று சசிகலாவை சந்திக்க சென்றபோது அவருடன் அவரது 10 ஆதரவு எல்ஏக்கள் சென்றனர்.
இதற்கிடையில் சசிகலாவைச் சந்தித்தப்பின் தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களிடம் பேசிய தினகரன், "அடுத்த இரண்டு மாதங்கள் என்பது அவர்களுக்கு கொடுக்கும் அவகாசம் அல்ல. நாமே நமக்கு கொடுத்துக்கொண்டிருக்கும் அவகாசம்.
எனவே, அடுத்த இரண்டு மாதங்களுக்குள் குறைந்தபட்சம் 40 சட்டமன்ற உறுப்பினர்கள் என்னை ஆதரிக்க வைக்கணும். அதற்கான ஏற்பாடுகளை விரைந்து செய்யுங்கள். எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கும் தலித் எம்.எல்.ஏ-க்கள் என எல்லோரையும் தூக்குங்கள். அவங்களுக்கு என்ன தேவையோ அதை செஞ்சி கொடுங்க" என உத்தரவு போட்டுள்ளாராம்.
சசிகலாவுடனான சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த தினகரன்,'தன்னை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை எனவும், அமைச்சர்களுக்கு மேலும் இரண்டு மாதங்கள் அவகாசம் வழங்குவதாகவும் தெரிவித்தார்.
இந்த சூழ்நிலையில் இன்று காலையில் சென்னை பெசன்ட் நகரிலுள்ள தினகரன் இல்லத்தில் எம்எல்ஏக்கள் கலசப்பாக்கம் பன்னீர்செல்வம், செய்யாறு மோகன் ஆகியோர் சந்தித்தனர். பின்னர் முன்னாள் அமைச்சர்களும் எம்எல்ஏக்களுமான செந்தில்பாலாஜி, பழனியப்பன், தோப்பு வெங்கடாச்சலம் மற்றும் மதுரை வடக்குத் தொகுதி ராஜன் செல்லப்பா,பரமக்குடி முத்தையா ஆகியோரும் சந்தித்தனர். இத்துடன் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து தினகரனின் கோஷ்டி அடுத்த வேட்டையை குதித்துள்ளது. எடப்பாடி மீது அதிருப்தியில் இருப்பவர்கள் யார் யார் என்ற விவரங்களைத் திரட்டி சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ-க்களை வளைக்க மெகா திட்டத்தைத் தயார் செய்துவருகிறார்கள் தினகரன் தரப்பினர்.
இதே நேரத்தில் தலைமைச் செயலகத்தில் 3 நாட்கள் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். மாவட்ட அமைச்சர்களுடன் சட்டமன்ற உறுப்பினர்களை சந்திக்கவைக்க தீவிர ஏற்பாடு நடந்து வருகிறது.
தினகரனுக்கு மிகவும் நெருக்கமாக உள்ள எம்எல்ஏக்களையும் எடப்பாடி சந்திக்கிறார். எடப்பாடிக்கு ஆதரவு தந்துள்ள சட்டமன்ற உறுப்பினர்களை சமாதானப்ப்படுத்தும் முயற்சியாகத்தான் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. நாளை சட்டமன்ற கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் ஆட்சியைத் தக்கவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.