எடப்பாடி தலைமையிலான அரசு ஆட்சி நிலைப்பதற்காகவும் கட்சியையும் சின்னத்தையும் மீட்பதற்காகவும் பன்னீர்செல்வத்துடன் கூட்டணி வைப்பதென்று முடிவெடுத்தார். மேலும் டெல்லி தலைமையிடமும் வலியுறுத்தி வந்ததாக தெரிகிறது. இதைதொடர்ந்து ஒபிஎஸ் அணியின் கோரிக்கைகளை ஏற்று இரு அணிகளும் ஒன்றாக இணைந்தது. ஆனால் விரைவில் சசிகலாவை பொதுக்குழு கூட்டி முடிவெடுக்கப்படும் என வைத்தியலிங்கம் அறிவித்தார். இதையடுத்து 19 எம்.எல்.ஏக்கள் எடப்பாடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். தொடர்ந்து புதுச்சேரி கடற்கரையை ஒட்டியுள்ள சின்னவீராம்பட்டினம் அருகே உள்ள தி விண்ட் பிளவர் என்ற ஆடம்பர சொகுசு ரிசார்ட்டில் கடந்த 4 நாட்களாக எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.மேலும், இவர்களை தொடர்ந்து அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தின சாபாபதியும் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தார். இதனால் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது. மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு 20 எம்.எல்.ஏக்களின் ஆதரவு குறைந்தது. இதனால் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 112 மட்டுமே உள்ளது. அதிமுக கூட்டணி எம்.எல்.ஏக்களான தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோரின் ஆதரவு யாருக்கு என்று இதுவரை அவர்கள் தெரிவிக்கவில்லை. திமுக கூட்டணியாக 98 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஆட்சியை தக்கவைத்து கொள்ள 117 எம்.எல்.ஏக்கள் தேவை என்ற நிலையில், வெறும் 112 எம்.எல்.ஏக்களை மட்டுமே எடப்பாடி கொண்டுள்ளதால் மைனாரிட்டி அரசாக செயல்பட்டு வருகிறது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் எனவும் மைனாரிட்டி அரசாக செயல்பட ஆளுநர் உதவக்கூடாது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். தற்போதைய சூழ்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் ஆட்சி கவிழ்வது உறுதியாகிவிட்டது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாளை ஆளுநர் தமிழகம் வருகிறார். இதனிடையே ஆட்சியை தக்க வைக்க பல்வேறு சட்ட வல்லுநர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். எடப்பாடிக்கு 20 எம்.எல்.ஏக்களின் இழப்பு பெரும் பின்னடைவுதான் என கூறி திமுகவினர் மிகப்பெரிய சந்தோஷத்தில் ஆழ்ந்து வந்தனர். இந்நிலையில், திமுகவின் கவனத்தை சிதறடிப்பதற்காக பேரவையில் குட்கா கொண்டுவந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது தமிழக அரசு. அதாவது எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உட்பட 20 திமுக எம்.எல்.ஏக்களின் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் வரும் 28 ஆம் தேதி உரிமை குழுவை கூட்டியுள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு 20 எம்.எல்.ஏக்கள் பின்னடைவு ஏற்பட்டது போல், திமுகவுக்கும் அதே நிலை ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 20 - 20 மேட்ச் ஆடுவது எதிரிகளை சுற்றி சுற்றி பறக்க விடுகிறார் எடப்பாடி...