இது தமிழகத்திற்கும் தமிழர்களுக்கும் கிடைத்த பெருமை! செங்கோல் வைக்க முடிவு செய்த பிரதமருக்கு நன்றி! வானதி..!

By vinoth kumar  |  First Published May 25, 2023, 2:30 PM IST

ஜனநாயகத்தின் சின்னமான இந்திய நாடாளுமன்றத்தில், சபாநாயகர் இருக்கைக்கு அருகில், இந்தியா விடுதலை அடைந்தபோது தமிழ்நாட்டின் திருவாவடுதுறை ஆதீனத்தால் வழங்கப்பட்ட தமிழ் வாசகங்கள் பொறிக்கப்பட்ட 'செங்கோல்' வைக்கப்பட உள்ளது.


நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் செங்கோல் வைக்க முடிவு செய்த பாரத பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோருக்கு வானதி சீனிவாசன்  நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- பிரதமர், மத்திய அமைச்சர்கள், தேசிய கட்சிகளின் தலைவர்கள் தமிழ்நாடு வரும் போதெல்லாம், தமிழ் மொழி பற்றியும், தமிழ் கலாசாரம் பற்றியும் ஓரிரு வார்த்தைகள் பேசுவது வழக்கமானது. அதுவும் தேர்தல் நேரம் என்றால், கூடுதலாக தமிழ் பற்றி பேசுவார்கள் தமிழிலேயே சில வார்த்தைகள் பேசுவார்கள். 

Latest Videos

ஆனால், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அப்படிப்பட்டவர் அல்ல. அவர் தேர்தல் அரசியலுக்காக எதையும் சிந்திப்பவர் அல்ல. தமிழ்நாட்டுக்கு வரும்போது மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கு வெளியே பிற மாநிலங்களிலும், பிற நாடுகளிலும் ஏன் தமிழர்களே இல்லாத, தமிழர்களுக்கே தொடர்பில்லாத கூட்டங்களில் கூட, தமிழ் மொழி பற்றி தமிழ் கலாச்சாரம் பற்றியும் பெருமையாக பேசியிருக்கிறார் பேசி வருகிறார்.

திருக்குறள், சங்க இலக்கியங்கள், மகாகவி பாரதியார் பாடல்கள் என தமிழின் இலக்கியச் செழுமை, அதில் உள்ள உலகளாவிய மனிதநேய, சமத்துவ சிந்தனைகளை பல்வேறு உலக நாடுகளிலும், ஐக்கிய நாடுகள் சபை போன்ற உலக அரங்குகளிலும் பிரதமர் மோடி பேசி வருகிறார். உலகின் மிகத் தொன்மையான மொழி தமிழ். அது இந்தியாவின் பெருமிதம். இந்தியாவின் சொத்து. ஒவ்வொரு இந்தியரும் தமிழ் மொழியை கற்க வேண்டும். தமிழர்களிடம் உள்ள மொழிப்பற்று தமிழ் கலாசாரத்தின் மீதான விடாப்பிடியான பற்று அனைவருக்கும் இருக்க வேண்டும்" என்று ஒவ்வொரு கூட்டங்களிலும் பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார்.  

ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளில் பயணத்தை முடித்து கொண்டு இப்போது டெல்லி திரும்பியதும் வரவேற்பு கூட்டத்தில் பேசும்போதுகூட, பப்புவா நியூகினியா நாட்டில், 'டோக் பிசின்" மொழியில் திருக்குறள் நூலை வெளியிட்டதை நினைவுகூர்ந்து, தமிழ் உலகின் தொன்மையான மொழி என்பதை மீண்டும் பறைசாற்றி இருக்கிறார். தமிழின் உலக தூதராக மாறி, தமிழ் மொழியின் சிறப்புகளை உலகெங்கும் பறைசாற்றி வரும் பிரதமர் நரேந்திர மோடி, தமிழுக்கு மற்றொரு மணி மகுடத்தை அளித்திருக்கிறார். பல்வேறு மதங்கள், இனங்கள், மொழிகள், கலாசாரங்கள் கொண்ட, 130 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் நம் இந்திய திருநாடு, மக்களாட்சியில் உலகிற்கே வழிகாட்டி கொண்டிருக்கிறது. மக்களாட்சியின் மகத்துவமான நமது இந்திய நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதனை மே 28-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார்.

ஜனநாயகத்தின் சின்னமான இந்திய நாடாளுமன்றத்தில், சபாநாயகர் இருக்கைக்கு அருகில், இந்தியா விடுதலை அடைந்தபோது தமிழ்நாட்டின் திருவாவடுதுறை ஆதீனத்தால் வழங்கப்பட்ட தமிழ் வாசகங்கள் பொறிக்கப்பட்ட 'செங்கோல்' வைக்கப்பட உள்ளது. இது தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் கிடைத்த பெருமையாகும். 1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற போது, இந்தியாவில் பாரம்பரியமாக ஆட்சி மாற்றம் நடக்கும்போது பின்பற்றப்பட்ட நடைமுறையை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி மூதறிஞர் ராஜாஜியின் ஏற்பாட்டில், திருவாவடுதுறை  ஆதீனத்திலிருந்து செங்கோல் தயாரித்து எடுத்துச் செல்லப்பட்டு, நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவிடம், தேவாரப் பதிகங்கள் பாடப்பட்டு வழங்கப்பட்டது. அடிமைச் சங்கிலியில் இருந்து விடுபட்டு, சுதந்திரப் பறவையாகி விட்டோம் என்பதை அறிவித்தது, தமிழையும், சைவத்தையும் இரு கண்களாக போற்றும் திருவாவடுதுறை ஆதீனத்துச் செங்கோல் தான். 

இப்படி நமது பாரதத்தின் பழமையான வரலாறு, கலாசாரத்தோடு தொடர்புடைய, தமிழகத்தின் பெருமிதமான நம் ஆதினத்து செங்கோல், இந்திய நாடாளுமன்றத்தை நிரந்தரமாக அலங்கரிக்க இருக்கிறது. இது உலகெங்கும் வாழும் ஒவ்வொரு தமிழரும் நினைத்து நினைத்து பெருமிதம் கொள்ளக்கூடிய ஒன்றாகும். புதிய நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் செங்கோல் வைக்க முடிவு செய்த பாரத பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என வானதி சீனிவாசன்  தெரிவித்துள்ளார்.

click me!