
தினகரன் தனிக்கட்சி தொடங்கினால், அவருக்கு ஆதரவு அளிப்பது குறித்து தங்க தமிழ்ச்செல்வன் வெவ்வேறு கருத்துகளை கூறிவருகிறார்.
அதிமுகவிலிருந்து ஓரங்கட்டப்பட்டு இரட்டை இலையை இழந்தபோதிலும், சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு ஆர்.கே.நகரில் தினகரன் அபார வெற்றி பெற்றார்.
ஆர்.கே.நகர் வெற்றி தினகரனுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் உத்வேகத்தை அளித்துள்ளது. ஆட்சியாளர்கள் மீதான மக்களின் வெறுப்பை ஆர்.கே.நகரில் அறுவடை செய்த தினகரன், உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிடும் முனைப்பில் உள்ளார்.
தினகரனின் தனிக்கட்சி தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, தினகரன் தனிக்கட்சி தொடங்கினால், தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் அவரது கட்சியில் சேரமாட்டோம். நாங்கள் அதிமுக உறுப்பினர்கள். எனவே சசிகலாவை பொதுச்செயலாளராக ஏற்றுள்ள நாங்கள், அப்படியே தொடருவோம் என தெரிவித்தார்.
தினகரனின் கட்சியில் கண்டிப்பாக சேரமாட்டோம் என தெரிவித்திருந்த தங்க தமிழ்ச்செல்வன், தற்போது வேறு கருத்தை தெரிவித்துள்ளார். தினகரனின் கட்சியில் சேரமாட்டோம். ஆனால், வெளியிலிருந்து ஆதரவு தருவோம். தனிக்கட்சி தொடங்கும் பட்சத்தில் தினகரன் தனியாக செயல்படுவார். நாங்கள் தனியாக செயல்படுவோம் என தெரிவித்துள்ளார்.