
ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் பழனிசாமியும் பன்னீர்செல்வமும் முடிந்தால், தகுதிநீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்யட்டும் என தினகரன் ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் சவால் விடுத்துள்ளார்.
ஆர்.கே.நகரில் தினகரனிடம் படுதோல்வியை சந்தித்ததன் எதிரொலியாக, தினகரனின் ஆதரவு கட்சி நிர்வாகிகள் பலர், அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே புகழேந்தி, நாஞ்சில் சம்பத், கலைராஜன், சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்ட தினகரனின் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கிய பழனிசாமியும் பன்னீர்செல்வமும், மேலும் 164 பேரை கட்சியின் பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கியுள்ளனர்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தினகரனின் ஆதரவாளரும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏவுமான தங்க தமிழ்ச்செல்வன், மாவட்ட நிர்வாகிகளை நீக்கும் பழனிசாமியும் பன்னீர்செல்வமும், தைரியம் இருந்தால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்யட்டும் என சவால் விடுத்தார்.
கொஞ்சம் கொஞ்சமாக நீக்குவதற்கு பதிலாக, பழைய பொறுப்பாளர்கள் அனைவரையும் நீக்கிவிட்டு புதிய பொறுப்பாளர்களை நியமித்து விட வேண்டியதுதானே. நேரமும் வேலையாவது மிச்சமாகும். பழனிசாமியும் பன்னீர்செல்வமும், நிர்வாகிகள் நீக்க பட்டியலை படித்து விட்டு கையெழுத்திட வேண்டும். ஏனென்றால், ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவரை அவர்களே நீக்கம் செய்யக்கூட வாய்ப்பிருக்கிறது என தங்க தமிழ்ச்செல்வன் கிண்டலாக தெரிவித்தார்.